செஞ்சி கோட்டைக்கு சர்வதேச அங்கீகாரம் சர்வதேச அளவில் சுற்றுலா மேம்பட வாய்ப்பு
செஞ்சி,:செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளதன் வாயிலாக, சர்வதேச அளவிலான சுற்றுலா பயணியரின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்புள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கோட்டை அமைந்துள்ளது. மூன்று மலைகளை இணைத்து, 1,200 ஏக்கர் பரப்பளவில், 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களுடன், 80 அடி அகலம் உள்ள அகழிகளுடன், 800 அடி உயர மலை உச்சியில், கி.பி., 1190ம் ஆண்டு கோணார் வம்சத்தினர் செஞ்சி கோட்டையை கட்டினர்.சத்ரபதி சிவாஜி ஆட்சியின் போது முக்கிய ராணுவ கேந்திரமாக விளங்கிய மஹாராஷ்டிராவில் உள்ள 11 கோட்டைகள், தமிழகத்தில் உள்ள செஞ்சி கோட்டை என, மொத்தம் 12 கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என, கடந்த ஆண்டு மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதையடுத்து, 2024 செப்., 27ம் தேதி 'யுனெஸ்கோ' பிரதிநிதி செஞ்சி கோட்டையில் ஆய்வு செய்தார். எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு நிர்வாகம், காவல் துறை, வனத்துறை, இந்திய தொல்லியல் துறையின் கூட்டு கூட்டத்தை நடத்தி, மக்கள் கருத்தை கேட்டனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், பிரான்சில் உள்ள யுனெஸ்கோ தலைமையகம், நேற்று முன்தினம் செஞ்சி கோட்டை உட்பட, 12 கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.தமிழகத்தில் ஏற்கனவே மாமல்லபுரம் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோவில், ஊட்டி மலை ரயில் ஆகியவை உலக பாரம்பரிய சின்னங்களாக உள்ளன. இப்பட்டியலில் செஞ்சி கோட்டை, 6வதாக இடம் பெற்றுள்ளது. செஞ்சி கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி கோட்டையை மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து மேம்படுத்தும். இதனால் செஞ்சி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான படகு சவாரி, ரோப்கார் திட்டங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது.
உலகமே வியந்து பார்க்கும்
தமிழக வரலாற்று பெருமைக்கு சான்றாகவும், இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்கும் சரித்திர பூமியாகவும் செஞ்சி கோட்டை உள்ளது. வான் உயர்ந்த மலைக்கோட்டை, கலை நயம் மிக்க கற்கோவில்கள், அற்புத நெற் களஞ்சியங்கள், ஆழமான அகழி என, எழில் மிகு ஓவியமாய் வியக்க வைக்கும் செஞ்சி கோட்டையை யுனெஸ்கோ அங்கீகரித்தது மகிழ்ச்சி. உலக சுற்றுலா பயணியரை ஈர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.முனுசாமி,ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்,வரலாற்று ஆர்வலர், அண்ணமங்கலம். பிரதமருக்கு நன்றி
செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்திருப்பது பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாக திறமைக்கு கிடைத்துள்ள வெற்றி. இந்தியாவின் பாரம்பரியம், கலை, கலாசாரம், வீரம், சிற்பக்கலையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள செஞ்சி கோட்டையை உலகம் முழுதும் தெரியவைத்து, தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ள பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி.தங்கராமு பா.ஜ., முன்னாள் நகர தலைவர்
ஆட்சி செய்த மன்னர்கள்
கோணார்கள் -- கி.பி., 1190 - 1320குறும்பர்கள் - கி.பி., 1321 -- 1330ஒய்ச்சாலர்கள் - கி.பி.,1331 -- 1337 விஜயநகர மன்னர்கள் - கி.பி., 1338 -- 1396நாயக்க மன்னர்கள் - கி.பி., 1397 -- 1647முகமதியர்கள் - கி.பி., 1648 -- 1677 சத்ரபதி சிவாஜியின் மராட்டியர்கள் - கி.பி., 1678 -- 1697மொகாலாயர்கள் - கி.பி., 1698 -- 1749பிரெஞ்சுக்காரர்கள் - கி.பி., 1750 -- 1770 ஆங்கிலேயர்கள் - கி.பி., 1770 -- 1780