உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடூர் அணையில் மீன் பிடித்து விற்பனை செய்வதில் முறைகேடு? மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை

வீடூர் அணையில் மீன் பிடித்து விற்பனை செய்வதில் முறைகேடு? மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை

வீடூர் அணையில் மீன் பிடித்து விற்பனை செய்வதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெறுவதாகவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியத்தில் வீடூர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர் கொள்ளளவு 605 மில்லியன் கன அடியாகும், அணையின் உயரம் 32 அடியாக உள்ளது. மழைக்காலத்தில் இங்கு சேமிக்கும் நீர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்த்து 2200 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த அணையில் மீனவர் நலத்துறை சார்பில் மீன் பிடித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அணையில் மீன் பிடிக்க மாலை நேரத்தில் வலை விட்டு மறுநாள் காலையில் மீனை பிடித்து கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இவ்வாறு மீனை பிடிக்க மீன்பிடி தொழிலாளர்கள் தண்ணீரில் இறங்கும் போது எத்தனை பேர் செல்கின்றனர் என பதிவேட்டில் பெயர்கள் எழுதி பராமரிக்கப்படும். மேலும், மீன் பிடித்து கரைக்கு வந்தவுடன் அவர்கள் அனைவரும் பத்திரமாக வந்து விட்டார்களா, எவ்வளவு மீன் பிடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறித்தும் கணக்கெடுத்து பதிவேடுகளில் பதிவு செய்யப்படும். அது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும்போது அவர்களுக்கு முன்னதாக டோக்கன் வழங்கி வாடிக்கையாளர் வாங்கும் மீனின் எடையை பொறுத்து பணம் பெற்று பதிவேட்டில் பதிவு செய்த பிறகு அவர்களுக்கு கட்டிய பணத்திற்கான பில் வழங்கப்படும். இவ்வாறு கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் மற்றும் மீனின் அளவு விற்பனை செய்யும் விபரம் இவைகள் எதுவுமே பதிவேடுகளில் பதிவு செய்யப்படுவதில்லை. பொதுமக்கள் கொடுக்கும் பணத்திற்கு பில் ஏதுவும் கொடுக்காமலும் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அணையில் எவ்வளவு மீன் பிடிக்கப்படுகிறது என்று அரசுக்கு கணக்கு காட்டாமல் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மீன் பிடிப்பதில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !