குறைந்தழுத்த மின்சாரத்தால் மின் மோட்டார்கள் பழுது: மேல்மலையனுார் பகுதி விவசாயிகள் வேதனை
செஞ்சி: மேல்மலையனுார் பகுதி கிராமங்களில் குறைந்தழுத்த மின்சாரம் சப்ளையால் விவசாயிகளின் மின் மோட்டார்கள் பழுதாகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில், மேல்மலையனுார் தாலுகா விவசாயம் சார்ந்த பகுதி. இங்கு கிணற்றுப் பாசனமே அதிகமாக உள்ளது. கிணற்று பாசனத்திற்கு மின்சாரம் மிக முக்கியமானது. தாலுகாவில் அவலுார்பேட்டை, தேவனுார், தாயனுார் ஆகிய இடங்களில் துணை மின்நிலையங்கள் உள்ளன. இந்த துணை மின் நிலையங்கள் நீங்கலாக கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பெருவளூர், மரக்கோணம், கிழவன்பூண்டி, காரணி, வடவெட்டி, சிந்தகம்பூண்டி, ஞானோதயம், சூரப்பன்தாங்கல், மேல்நெமிலி, மோடிபட்டு உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.இந்த கிராமங்களில் கடந்த சில நாட்களாக மும்முனை இணைப்பிற்கு காலை 8:00 மணிக்கு மின்சாரம் வழங்கி மாலை 5:00 மணிக்கு நிறுத்தி விடுகின்றனர். இரவு 12:00 அல்லது 1:00 மணிக்கு மின்சாரம் வழங்கி அதிகாலை 5:00 மணிக்கு நிறுத்தி விடுகின்றனர். பகல் நேரத்தில் வழங்கப்படும் மின்சாரம் 240 வோல்டோஜ் இல்லாமல் 170 முதல் 190 வோல்டேஜ் மின்சாரம் வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகளின் மின் மோட்டார்களில் காயில் எரிந்து பழுதானது. இப்பகுதியில் உள்ள தொழிற் பட்டறைகள், வெல்டிக் கடைகள், கல் குவாரிகள், கிரைனைட் தொழிற் சாலைகளிலும் பல இடங்களில் மின் மோட்டார்கள் பழுதாகின்றன. வீடுகளில் உள்ள போர்களிலும் தண்ணீர் எடுக்க 3 மடங்கு நேரம் மோட்டாரை இயக்குகின்றனர்.பகல் நேரத்தில் மின் மோட்டார்கள் சூடாகி காயில் எரிந்து போவதால் விவசாயிகள் இரவு நேரத்தில் மின் மோட்டரை இயக்கி வருகின்றனர். வீடுகளில் 'ஏசி' உள்ளிட்ட மின் சாதனங்கள் அடிக்கடி பழுதாகிறது. கோடை துவக்கத்திலேயே இந்த பிரச்னை தீவிரமாகி வருவாதல் அடுத்த சில நாட்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டால் ஊராட்சிகளில் உள்ள மின் மோட்டார்களும் காயில் ஏரிந்து பழுதாகும். இதனால் கிராமங்களில் குடிநீர் வினியோகமும் பாதிக்கும். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கோடை துவங்கியதும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக கூடுவாம்பூண்டியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என கடந்த ஆண்டு மே மாதம் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அப்போது பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டதாக மின் வாரிய அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டனர்.கடந்த 2 மாதங்களுக்கு முன் செஞ்சிக்கு வருகை தந்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றார். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் இதற்கான எந்த முன்னெடுப்பும் செய்ய வில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தினமும் விவசாயிகளை சந்திக்கும் மின்வாரிய ஊழியர்கள் விவசாயிகளின் கோபத்திற்கு ஆளாகி வருகின்றனர். நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரித்து வருவதால் அடுத்து வரும் நாட்களில் விவசாயிகள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது.எனவே, விழுப்புரம் மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு குறைந்தழுத்த மின்சார பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். நிரந்தர தீர்வாக கூடுவாம்பூண்டியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை அரசுக்கு தெரியப்படுத்தி மிக விரைவில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.