ஆசிரியர் பணிக்கு போலி நியமன ஆணை வழங்கிய நபர் 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது
விழுப்புரம்: செஞ்சி அருகே ஆசிரியர் பணிக்கு போலி பணி நியமன ஆணை வழங்கிய நபர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த இல்லோடு அரசு மேல்நிலைப் பள்ளியில், முதுகலை ஆசிரியராக சுமதி என்பவர், கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி முதல் பணிபுரிந்தார். இவர், பள்ளிக் கல்வி இயக்குனர் பெயரில், போலி பணி நியமன ஆணையை வழங்கி பணியில் சேர்ந்தது தெரியவந்தது.இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். ஆசிரியர் சுமதி மீது, கடந்த 2016ம் ஆண்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில், ஆசிரியர் சுமதி, பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றார். பணி நியமனம் மோசடி தொடர்பாக, சுமதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அதில், அவர் ஆசிரியர் பணிக்காக 15 லட்சம் ரூபாயை, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா, சேவூர், இ.பி.காலனி, செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல், 42; என்பவரிடம் கொடுத்துள்ளார். சக்திவேல், சென்னை பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தின் பணி நியமன ஆணையை போலியாக தயாரித்து சுமதியிடம் கொடுத்திருப்பது தெரியவந்தது.இதையடுத்து, சக்திவேலை போலீசார் தேடி வந்தனர். நேற்று, திருவண்ணாமலை மாவட்டம், சேவூரில் சக்திவேலை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை செஞ்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, விழுப்புரம் வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.