கைம்பெண்களுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம்
வானுார்; வானுார் ஊராட்சி ஒன்றியத்தில் மகளிர் உரிமைத்துறை சார்பில் கைம்பெண்களுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.தமிழக அரசின் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மூலம் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி வானுார் ஒன்றியத்தில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.முகாமில் சிறப்பு விருந்தினர் ஒன்றிய சேர்மன் உஷா முரளி தலைமை தாங்கி, பயனாளிகளிடம் இருந்து உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை பெற்றார். முகாமில், மொத்தம் 276 படிவனங்கள் பெறப்பட்டது.நிகழ்ச்சிக்கு வானுார் பி.டி.ஓ.,க்கள் சுபாஷ்சந்திர போஸ், மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விரிவாக்க அலுவலர் வீரமணி, மகளிர் ஊர் நல அலுவலர் உலகரட்சகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.