வானுார் : விழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான வானுார் பகுதியில் 'மினி டைடல் பார்க்' திறக்கப்பட்டதால், ஐ.டி., நிறுவனங்கள் தொழில் துவங்க வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.தமிழக அரசு, தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், மாநிலம் முழுவதும் பரவலாக வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில், சென்னை தரமணியில் இருப்பது போன்று, சிறிய நகரங்களில் டைடல் பார்க் கட்டடம் கட்டி வருகிறது.அதன்படி, விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், மயிலம் ரோட்டில் ரூ. 31 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் 63,000 சதுரடி பரப்பளவில், மினி டைடல் பூங்கா கட்டப்பட்டது.இந்த கட்டடத்தில் 500 ஐ.டி., வல்லூநர்கள் பணியாற்றலாம். இந்த டைடல் பூங்காவை கடந்தாண்டு பிப்.17ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலமாக திறந்து வைத்தார்.தற்போது வரை, இங்கு மூன்று நிறுவனங்கள் மட்டுமே தொழில் துவங்கியுள்ளன.முதலில் துவங்கப்பட்ட எஸ்.யு.வி., என்ற தனியார் நிறுவனத்தில் 60 பேர் பணிக்கு சேர்ந்துள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள கம்பெனிக்கு பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மற்ற இரு நிறுவனங்களில் 50 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்த டைடல் பார்க் துவங்கப்பட்டு, பதினோரு மாதங்கள் கடந்து விட்டது. ஆனால், ஒன்பது நிறுவனங்கள் செயல்படக்கூடிய இந்த கட்டடத்தில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே தொழில் துவங்க முன் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிரம்பிய ஐ.டி., பார்க்
ஒவ்வொரு டைடல் பார்க் கட்டடம் கட்டுவதற்கு முன்பாக, தொலைநோக்கு சிந்தனையுடன், நகரத்தை ஒட்டிய பகுதியை தேர்வு செய்கின்றனர். குறிப்பாக தஞ்சையில் துவங்கப்பட்ட டைடல் பார்க் கட்டடம் கட்டி திறக்கப்பட்டு, 15 தினங்களில் பல்வேறு நிறுவனங்களால் முழுமையாக நிரம்பி விட்டது.அதேபோல தூத்துக்குடி, வேலூரில் டைடல் பார்க் கட்டடங்கள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே 100 சதவீத அலுவலக இடங்களையும், பல்வேறு நிறுவனங்கள் பதிவு செய்தன. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கட்டப்பட்ட டைடல் பார்க்கில், அனைத்து அலுவகங்களும் நிரப்பி விட்டது குறிப்பிடத்தக்கது. காரணம் என்ன
விழுப்புரம் மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்ற நோக்கில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட மயிலம் ரோட்டில் இருந்து உட்புற சாலையில் (400 மீட்டர் தொலைவில்) ஐடி., பார்க் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.இந்த ஐ.டி.,பார்க் அமைந்துள்ள இடம், விழுப்புரம் மாவட்டத்தின் கடைசி எல்லையாகும். அதாவது, விழுப்புரத்தில் இருந்து டைடல் பார்க் அமைந்துள்ள வானுார் பகுதி வரை 50 கி.மீ., தூரம் உள்ளது.பணியாளர்கள் எளிதாக வந்து செல்ல ஏதுவாக போதிய போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், இவ்வளவு தூரத்தில் உள்ள ஐ.டி. பூங்காவில் தொழில் துவங்க தனியார் நிறுவனங்கள் யோசிக்கின்றன.பணியாளர்களை தேர்வு செய்தால், அவர்கள் கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வானுார் பகுதிக்கு வருவதற்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் தனியார் நிறுவனங்கள் தொழில் துவங்க முன்வராமல் ஜவ்வாக இழுத்து வருகின்றன. அரசின் சலுகை தேவை
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், துவக்கப்பட்ட மினி டைட்டல் பார்க் மூலம், ஆயிரக்கணக்கான ஐ.டி., பணியாளர்கள் வேலையில் சேர்ந்து பயன்பெற்று வருகின்றனர். ஆனால் வானூரில் துவங்கப்பட்ட டைடல் பார்க், தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது.இதை தவிர்க்க வேண்டும் என்றால், தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு, அரசு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும்.குறிப்பாக, புதிதாக தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு, மானிய விலை வழங்குவது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட காலத்திற்கு வாடகை இல்லாமல் இடவசதி செய்து தர வேண்டும்.மேலும், மாவட்ட தலைநகரமான விழுப்புரத்தில் இருந்து வானூர் ஐ.டி., பூங்காவிற்கு நேரடியாக போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.இப்படி செய்தால் மட்டுமே, தனியார் நிறுவனங்கள் தொழில் துவங்க வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஐ.டி., வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.