கிராமங்களிலும் விளையாட்டு மேம்பட வேண்டும் அமைச்சர் பொன்முடி பேச்சு
விழுப்புரம்: 'கிராமங்களிலும் விளையாட்டு மேம்பட வேண்டும்' என அமைச்சர் பொன்முடி பேசினார்.விழுப்புரத்தில் நடந்த, அரசு பள்ளிகளில் ஓடி விளையாடு பயிற்சி திட்ட தொடக்க விழாவில், அவர் பேசுகையில், 'சிறுவயதிலேயே விளையாடவும், கற்க வேண்டும் என்பதை, ஓடி விளையாடு பாப்பா என்று, நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனை செயல்படுத்தும் விதத்தில் இப்பயிற்சி அமையும்.விளையாட்டை போல் படிப்பிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டோடு, கல்வியையும் பயின்றால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.தொடர்ந்து உயர்கல்விக்கு சென்றாலும் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். பிற விளையாட்டுகளிலும் ஆர்வம் செலுத்த வேண்டும். கிரிக்கெட், வாலிபால், புட் பால் போன்று, மல்லர் கம்பம் விளையாட்டும் வளர வேண்டும்.நகர பகுதிகளில் மட்டுமின்றி கிராமங்களிலும் விளையாட்டு மேம்பட வேண்டும். ஆரம்ப கல்வி சரியாக அமைந்தால் தான் எதிர்காலமும் சிறப்பாக அமையும்' என்றார்.தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசுகையில், 'தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு, விளையாட்டு உபகரணங்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கி வருகிறார். விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்கு பொருளாதாரம் தடையாக இருகக்க்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கி வருகிறார்.முந்தைய ஆட்சியில், விளையாட்டுத் துறைக்கு அமைச்சர் இருப்பதே தெரியாது. விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தரவே, துணை முதல்வர் உதயநிதி நியமிக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.விளையாட்டு மைதானமும் ஒரு வகுப்பறை தான். சுய ஒழுக்கத்தை கற்றுத் தருவதும் விளையாட்டு தான். மல்லர் கம்பம், வீர விளையாட்டாக பார்க்கிறோம். இந்த விளையாட்டும் மேம்பட வேண்டும். விளையாட்டால், தலைமை பண்பு, தன்னம்பிக்கை வளர்ந்து, கல்வியிலும் சிறந்து விளங்க முடியும்' என்றார்.