கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தாய், மகன் விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தாயுடன் மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் அடுத்த பரசுரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கபூர், 47; கூலித் தொழிலாளி. இவர், நேற்று பகல் 12:00 மணிக்கு தனது தாய் ஏகவள்ளி, 75; என்பவரோடு கலெக்டர் அலுவலகம் வந்தார். நுழைவு வாயில் முன் வந்த இவர்கள், திடீரென தீக்குளிக்க முயன்று, தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொள்ள முயன்றனர். பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார், விரைந்து சென்று தடுத்து, அவர்கள் வைத்திருந்த பெட்ரோல் கேனை பிடுங்கினர். விசாரணைக்குப் பின், அவர்களை எச்சரித்து, மனு அளித்து விட்டு செல்லும்படி அறிவுறுத்தினர். அதன் பேரில் அவர்கள்அளித்த மனு: எனக்கு சொந்தமாக 55 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை என்னை பயன்படுத்த விடாமல் அதே பகுதியைச் சேர்ந்த நால்வர், சேர்ந்து என்னையும், எனது தாயையும் மிரட்டி நிலத்தை அபகரித்து விட்டனர். இது பற்றி வளவனுார் போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. போலீஸ் எனக்கு உதவாமல், எதிர் தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அந்த 4 பேர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.