உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டுமனை பட்டா மாற்றத்தில் முறைகேடு: தாய், மகன் தீக்குளிக்க முயற்சி

வீட்டுமனை பட்டா மாற்றத்தில் முறைகேடு: தாய், மகன் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீட்டுமனை பட்டா மாற்றத்தில் நடந்த முறைகேட்டை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன் தாய், மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் அடுத்த அரியலுார், திருக்கை டட்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் மைக்கேல் டிசோஸ், 30; கூலித் தொழிலாளி. இவரது தாய் அன்னம்மாள், 80; இருவரும் நேற்று காலை 11:00 மணிக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது, திடீரென அலுவலக வாயில் முன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். உடன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்து மனு அளித்துச் செல்லும்படி அனுப்பி வைத்தனர். அவர்கள் டி.ஆர்.ஓ., அரிதாசிடம் அளித்துள்ள மனு: டட்நகரில் கடந்த 50 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறோம். தற்போது வசித்து வரும் 8 சென்ட் அளவிலான வீட்டு மனையை பக்கத்தில் வசித்து வரும் இறந்த அந்தோணிசாமி என்பவரின் பெயரில், முறைகேடாக பட்டா மாற்றி வழங்கியுள்ளனர். அதனை ரத்து செய்து, எங்களுக்கு மாற்றி பட்டா வழங்க வேண்டும் என விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் பல முறை மனு அளித்தோம். விழுப்புரம் ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி, அறிக்கையும் தாக்கல் செய்தனர். ஆனால், அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் இல்லை. முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்வதுடன், முறைகேடில் ஈடுபட்ட அலுவலர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற டி.ஆர்.ஓ., அரிதாஸ், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை