மேம்பால வளைவில் டிஜிட்டல் பேனர் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
விழுப்புரம் : விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் அருகே வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனரால் பொதுமக்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.சென்னையில் சாலை சென்டர் மீடியனில் வைத்த டிஜிட்டல் பேனர் சரிந்து விழுந்ததில், ஸ்கூட்டரில் சென்ற சுபஸ்ரீ லாரிமோதி சம்பவ இடத்திலே இறந்தார். இச்சம்பவத்திற்கு பிறகு பேனர் வைக்க உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, போலிஸ், நகராட்சி அனுமதி பெற்றே பேனர்கள் வைக்க வேண்டும்.ஆனால், விழுப்புரத்தில் இந்த விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் நகர பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடம், வாகன நிறுத்தங்களில் அனுமதியின்றி சகட்டுமேனிக்கு ஏராளமான டிஜிட்டல் பேனர்கள் வைக்கின்றனர். பேனர் வைக்கும் அரசியல் பிரமுகர்கள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி, பேனர்கள் மீது போலீஸ் கை வைக்காதபடி பார்த்து கொள்கின்றனர்.டிஜிட்டல் பேனர்களால் நகர பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே மேம்பாலம் திரும்பும் வளைவு பகுதியில் மெகா சைசில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.இந்த பேனர் அருகே வளைவில் உள்ள மேம்பாலத்தை மறைத்துள்ளதால் எதிர்புறம் வரும் வாகனங்கள், பொதுமக்களுக்கு தெரிவதில்லை. இதனால், வளைவில் திரும்பும் பல வாகன ஓட்டிகள், எதிரில் வரும் வாகனங்கள் மீதும், பொதுமக்கள் மீதும் மோதி விபத்தில் சிக்குகின்றனர். இதற்கு மூலக்காரணம் வளைவில் வைக்கப்பட்ட பேனர். இதுபோல் விழுப்புரம் நகரில் பல இடங்களில் மெகா சைஸ் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை போலீஸ் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து அகற்றி மேலும் இது போன்ற நிலை தொடராமல் நிரந்தர நடவடிக்கையை எடுக்க வேண்டும்.