நகராட்சி வணிக வளாக கடைகள்; குடிபிரியர்களின் பார் ஆகிய அவலம்
வி ழுப்புரம் நகராட்சியில் புதிதாக கட்டிய வணிக வளாக கடைகள் பயன்பாட்டிற்கு வராததால் குடிபிரியர்களின் பாராக மாறி வருகிறது. விழுப்புரம், காமராஜர் வீதியில் நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு 21 கடைகள் இரு புறங்களிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பணி முழுமையடைந்து பல மாதங்களாகியும் நகராட்சி அலுவலர்கள் வணிகர்களின் பயன்பாட்டிற்கு வாடகைக்கு விடுவதற்கான டெண்டரை அறிவிக்காமல் உள்ளனர். இதனால், குடிபிரியர்கள் பலர் அந்த வணிக வளாகத்திலே குடித்து விட்டு மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்தெறிகின்றனர். நகராட்சி பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிய வணிக வளாகம் குடிமகன்களின் 'பாராக' மாறியுள்ளது. அதிகாரிகள் விரைந்து கடைகளை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.