நந்தன் கால்வாயில் தண்ணீர் செல்வதில் சிக்கல்! மண் சரிந்து புதர் மண்டிய அவலம்
செஞ்சி : நந்தன் கால்வாயில் தண்ணீர் செல்லும் தேவதானம்பேட்டை வனப்பகுதியில் மண் சரிந்தும், புதர் மண்டியும் இருப்பதால் சோ.குப்பம் பொத்தேரிக்கு முன்பாக கால்வாயில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அடுத்துள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்லாமல் தடை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் துறிஞ்சல் ஆற்றில் இருந்து விழுப்புரம் மாவட்டம் பனமலை ஏரிக்கு தண்ணீர் வருவற்கான நந்தன் கால்வாயில் கடந்த மாதம் முதல் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த ஒரு மாதமாக திருவண்ணாமலை மாவட்ட ஏரிகளுக்கு தண்ணீர் சென்றது. இதில் பெரும்பான்மையான ஏரிகள் நிரம்பிய நிலையில் சில தினங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்ட ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துள்ளனர். இதன் மூலம் மாதம்பூண்டி, நல்லாண்பிள்ளை பெற்றாள், பாக்கம், சோ.குப்பம் ஏரிகளுக்கு தற்போது தண்ணீர் செல்கிறது. சோ.குப்பம் அடுத்த பொத்தேரியில் நந்தன் கால்வாய் தண்ணீர் ஏரியை கடந்து செல்ல தரையில் சுரங்கம் அமைத்துள்ளனர்.இந்த சுரங்கத்தை அடுத்து தேவதானம்பேட்டை வனப்பகுதி உள்ளது. வனப்பகுதியில் 300 மீட்டர் துாரத்திற்கு மண் சரிந்தும், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி தண்ணீர் செல்வதற்கு வழியின்றி தடை ஏற்பட்டுள்ளது. இந்த தடைகளை கடந்து மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் செல்கிறது. இதனால் பொத்தேரி சுரங்கத்தில் தண்ணீர் உள் வாங்காமல் அதற்கு முன்பாக கால்வாயில் தேங்கி நிற்கிறது. வனப்பகுதியில் தடைகளை அகற்றினால் மட்டுமே அடுத்துள்ள தேவதானம்பேட்டை, கணக்கன்குப்பம், தாண்டவசமுத்திரம், துத்திப்பட்டு ஏரிகளுக்கும் கடை மடை பகுதியான பனமலை ஏரிக்கும் தண்ணீர் செல்லும். அடுத்த வரும் நாட்களில் கனமழை பெய்து, நந்தன் கால்வாயில் தண்ணீர் அதிக அளவில் வந்தாலும் இந்த தண்ணீர் பாக்கம் ஏரிக்கு சென்று அந்த ஏரி நிறைந்ததும் வராகநதி வழியாக சென்று விடும். நந்தன் கால்வாய் மூலம் பலன் பெற வேண்டிய ஏரிகளுக்கு தண்ணீர் வராது. தேவதானம்பேட்டை அடுத்துள்ள வனப்பகுதியில் நீர்வள ஆதார அமைப்பினர் கடந்த இரண்டு ஆண்டாக எந்த பராமரிப்பு பணியையும் செய்யாமல் உள்ளனர். பருவ மழைக்கு முன்பு தடைகளை அகற்றாவிட்டால் இந்த ஆண்டும் பனமலை ஏரிக்கு தண்ணீர் செல்வது சந்தேகமே.எனவே, கலெக்டர் நீர்வள ஆதார அமைப்பின் உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் இப்பகுதியில் நேரடி ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என நந்தன்கால்வாய் பகுதி விவசாயிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டசபை இடைதேர்தல் பிரசாரத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி தி.மு.க., வெற்றி பெற்றால் நந்தன் கால்வாய்க்கு நிதி ஒதுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் மாவட்ட எல்லை வரை தடையின்றி தண்ணீர் வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நிதி இன்றி கடந்த இரண்டு ஆண்டாக பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யாமல் ஏராளமான இடங்களில் தடைகள் உள்ளன. இப்பிரச்னையை விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா அமைச்சர் உதயநிதி மற்றும் நீர்வள ஆதார அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்று பராமரிப்பிற்கு நிதியை பெற்று தந்து இந்த ஆண்டு பனமலை ஏரி நிறைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.