உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பல்லவர் கால சிற்பம்: மயிலம் அருகே கண்டெடுப்பு

பல்லவர் கால சிற்பம்: மயிலம் அருகே கண்டெடுப்பு

விழுப்புரம் : மயிலம் அருகே, பல்லவர் கால சண்டிகேஸ்வரர் சிற்பம், சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால சண்டிகேஸ்வரர் சிற்பம் மற்றும் சுடுமண் பொம்மை இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் கள ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:செண்டூர் கிராமத்தில் சுவாமிக்கு சொந்தமான நிலம் பகுதியில் பலகை கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம் ஒன்று கிடந்தது. இந்த சிற்பத்தை இங்குள்ள மக்கள் ஐயனார் என வழிபடுகின்றனர். இவர்களின் வேண்டுதல் நிறைவேற பல்வேறு பொம்மை உருவங்களையும் கடந்த காலங்களில் நேர்த்தி கடனாக செய்து வைத்துள்ளனர்.இந்த சிற்பத்திற்கு உரியவர் சண்டிகேஸ்வரர் ஆவார். வலது கையில் மழுவினை ஏந்தியுள்ளார். இடது கை தொடை மீதுள்ளது. கால்களை மடக்கி யோக நிலையில் அமர்ந்துள்ளார்.அழகான தலை அலங்காரத்தோடும், காதுகள், கைகளில் அணிகலன்களோடும் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சண்டிகேஸ்வரருக்கு இடதுபுறம் மரம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. வலது காலுக்கு கீழே பசு உள்ளது. சண்டிகேஸ்வரர் சிற்பம் பல்லவர் காலமான கி.பி., 8 - 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாகும். 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதிசெய்துள்ளார்.

சுடுமண் பொம்மை

இந்த சிற்பம் அமைந்துள்ள அதே பகுதியில் மிகவும் சிறிய அளவிலான சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கழுத்து வரை மட்டுமே காணப்படும் இந்த உருவம் குழந்தையின் உருவமாக இருக்கலாம். இந்த பொம்மையும் சண்டிகேஸ்வரர் சிற்பத்தின் காலத்தை சேர்ந்தது என மூத்த தொல்லியாளர்கள் ஸ்ரீதரன், துளசிராமன் தெரிவித்துள்ளனர்.செண்டூர் கிராமத்தில் கிராம தெய்வமான ஐயனாராக சண்டிகேஸ்வரரை வழிப்பட்டு வந்துள்ளார். இந்த வழிபாடு தற்போதும் தொடர்கிறது. இந்த வழிபாட்டில் சுடுமண் உருவங்களும் உள்ளன.செண்டூர் அரசு உயர்நிலை பள்ளியருகே கி.பி., 8 - 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த துர்க்கை சிற்பம் ஒன்றும் வழிபாட்டில் இருந்து வருகிறது.இதனால் 1,200 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் பல்வேறு வழிபாடுகளில் செண்டூர் கிராமம் சிறந்து இருந்துள்ளதை இதன் மூலம் அறிய முடிகிறது.இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ