விழுப்புரம் பஸ் நிலையத்தில் பயணிகள் தவிப்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் தீபாவளி விடுமுறை முடிந்து, ஊருக்கு செல்ல ஒரே நேரத்தில் பயணிகள் திரண்டதால், போதிய பஸ்களின்றி கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலிருந்து, 8 லட்சம் பேர், அவரவர் சொந்த ஊருக்கு சமீபத்தில் புறப்பட்டு சென்றனர். கொண்டாட்டங்கள் முடிந்து, நேற்று சென்னைக்கு படையெடுகக துவங்கினர். விழுப்புரம் மாவட்டத்தில், பகல் முழுவதும் பெய்த நிலையில் மாலை, 4:00 மணிக்கு மழை சற்று ஓய்ந்தது. இதையடுத்து வெளியூர்களுக்கு புறப்பட தயாராக இருந்த பொதுமக்கள் ஏராளமானோர் பஸ் நிலையம், ரயில் நிலையத்திற்கும் திரண்டனர். சென்னை கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில், பயணிகள் ஓடி இடம் பிடித்து சென்றனர். இந்த பஸ்களில் ஏற்கனவே கூட்டம் இருந்ததால், இடம் கிடைக்காமல் பயணிகள் பலர் சாரல் மழையில் நனைந்தபடி காத்திருந்தினர். திருச்சி, சேலம், மதுரை, கும்பகோணம் போன்ற ஊர்களிலிருந்து சென்னை நோக்கி சென்ற பெரும்பாலான பஸ்கள் விழுப்புரம் நகருக்குள் வராமல் பைபாஸ் சாலை வழியாக சென்றன. சேலம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திட்டக்குடி போன்ற பகுதியிலிருந்து சென்னை நோக்கி சென்ற பஸ்கள் விழுப்புரம் வந்து சென்றன. இந்த பஸ்களிலும் கூட்டம் அதிகரித்திருந்ததால், விழுப்புரத்திலிருந்து சென்னை செல்ல வந்து காத்திருந்த பயணிகள், கூட்ட நெரிசலில் ஏறி சென்றனர். இதே போல், விழுப்புரத்திலிருந்து சேலம், திருச்சி மார்க்கங்களில் செல்வதற்கும் பஸ்களில் இடமின்றி பயணிகள் அவதிப்பட்டனர். மாலை 6:00 மணி வரை, பஸ் நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரத்திலிருந்து கிளாம்பாக்கம், மாதவரம், தாம்பரம், சேலம், திருச்சி பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால், பொது மக்கள் மழையில் காத்திருந்து, தாமதமாக புறப்பட்டு சென்றனர்.