திண்டிவனத்தில் அரசு பஸ் திடீர் பழுது மாற்று பஸ் தாமதத்தால் பயணிகள் அவதி
திண்டிவனம் : திண்டிவனத்தில் பஸ் பழுதடைந்து பாதியில் நின்றதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ் ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று காலை சென்றது. இந்த பஸ் திண்டிவனம் நகரப்பகுதிக்குள் நுழையும் போது, திடீரென பழுதாகி நெடுஞ்சாலையோரம் நின்றது. பஸ் பயணிகள் கீழே இறங்கி நின்றிருந்தனர்.பஸ் பழுது குறித்து பஸ் டிரைவர், போக்குவரத்து பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவிக்க முயன்றார். ஆனால் அதிகாரிகள் மொபைல்போனை எடுக்காததால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஒரு மணி நேரம் கடும் வெயிலில் நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.அதன்பின்பு, திண்டிவனம் போக்குவரத்து பணிமனை அலுவலர்கள் அங்கு வந்தனர். பழுதடைந்த பஸ்சில் வந்த பயணிகளை மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் நேரங்களில் பஸ்கள் பழுதடைந்து பாதி வழியில் நிற்பதும், சுங்கச்சாவடிகளில் சிறப்பு பஸ் குறித்து அனுமதி கடிதம் வழங்காமல் சுங்க கட்டணம் செலுத்தாமல் நிற்கும் சம்பவம் தொடர் கதையாக உள்ளது.