தொகுப்பு வீடுகள் கட்டி தரக்கோரி மனு
மயிலம்; ஆலகிராம பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டி தரக்கோரி திண்டிவனம் சப் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.ஆலகிராமம் ஊராட்சிக்குட்பட்ட மண்டகப்பட்டு குறிஞ்சி நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்டகுடும்பங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் அளித்த மனு:கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில் எங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த வீடுகள் தற்போது, மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.குடியிருப்பு பகுதி பழுதடைந்திருப்பதால் புயல், மழை, வெள்ள காலங்களில் அதிகாரிகள் எங்களை அருகில் உள்ள பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கின்றனர்.எனவே, கிராமத்தில் பழுதடைந்த வீடுகளை அரசு அப்புறப்படுத்தி விட்டு புதியதாக தொகுப்பு வீடுகள் கட்டி தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.