கண்டமான வாகனங்கள் கடு ப்பில் போலீஸ் அதிகாரிகள்
விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில், கண்டமான வாகனங்களை பயன்படுத்தும் காவல் துறை அதிகாரிகள் அவதியடைந்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய நான்கு சப் டிவிஷன்கள் உள்ளன. இதில், 31 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.இந்த காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் இல்லாத காவல் நிலையங்களில் சப் இன்ஸ்பெக்டர்கள் நிலைய அலுவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.ஒரு காவல் நிலையத்திற்கு ஒரு ஜீப் அல்லது கார் ஒதுக்கீடு உள்ளது. இதில், இன்ஸ்பெக்டர்கள் உள்ள காவல் நிலையங்களுக்கு காவல் துறை சார்பில் ஜீப் அல்லது கார் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ள காவல் நிலையங்களுக்கு வழங்கப்படவில்லை.இதில், பல காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டவை. தற்போது பயன்படுத்த முடியாத அளவிற்கு கண்டமாகி, கலகலத்துள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே கசிந்தும், அடிக்கடி இன்ஜின் கோளாறு ஏற்பட்டும் வருகிறது. அதிகாரிகள், தங்கள் சொந்த செலவில் பழுதுபார்த்து பயன்படுத்தும் அவலம் நீடித்து வருகிறது.கடந்த 17 ஆண்டுகளாக காவல் நிலையங்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். வாகனம் வழங்காத காவல் நிலையங்களில் இருந்து குற்றவாளிகளை கைது செய்து சிறைக்கு அழைத்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால், புகார்தாரர் அல்லது குற்றவாளி தரப்பிடம் பணம் பெற்றுக்கொண்டு வாடகை வாகனங்களிலோ அல்லது இருசக்கர வாகனங்களில் சிறைக்கு அழைத்து செல்கின்றனர். எனவே, மாவட்ட காவல் நிலையங்களில் கண்டமான வாகனங்களை மாற்றிவிட்டு அனைத்து காவல் நிலையங்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்க காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.