நீர்நிலைகளுக்கு சிறார்களை அனுப்ப வேண்டாம்; கவனமாக இருக்க காவல்துறை எச்சரிக்கை
விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஆற்றில் குளித்த 3 சிறார்கள் இறந்ததால், சிறார்களை நீர்நிலைகளுக்கு அனுப்பாமல் கவனமாக இருக்க வேண்டும் என காவல் துறை விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.விழுப்புரம் அடுத்த அரசூர் பகுதியில் உள்ள மலட்டாற்றில், அரசூரைச் சேர்ந்த பழனி மகள்கள் அபிநயா, 15; சிவசங்கரி, 20; மற்றும் அவரது உறவினரான பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் ராஜேந்திரன் மகன் ராஜேஷ், 13; உள்ளிட்டோர், நேற்று முன்தினம் குளித்துள்ளனர். அப்போது, ஆற்றில் மூழ்கி மூவரும் இறந்தனர்.கோடை விடுமுறை தினத்தையொட்டி வீட்டிலிருந்து சிறார்கள், ஆற்று பகுதிக்கு வந்து தனிமையில் குளித்தபோது, இந்த விபரீதம் நிகழ்ந்து பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.ஆண்டு தோறும், விடுமுறை காலங்களில், ஆறு, குளம், குட்டைகளில் சிறார்கள், மாணவர்கள் மூழ்கி இறப்பது வாடிக்கையாகி வருகிறது.இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில், இந்த சம்பவங்களை தடுப்பதற்கு விழிப்புணர்வு பணியை தொடங்கியுள்ளனர்.இது குறித்து, விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று சமூக வலை தளங்களில், எச்சரிக்கை படங்களுடன் வெளியிட்ட விழிப்புணர்வு அறிக்கை:தற்போது மழைக்காலம் என்பதால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், ஆறு போன்ற நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால், பொதுமக்கள் யாரும், நீர்நிலைகளில் இறங்கி விளையாடுவதும், பெற்றோர்கள், பள்ளி விடுமுறையில் வீட்டிலிருக்கும் தங்களது குழந்தைகளை நீர்நிலைகளுக்கு செல்ல அனுமதிப்பதையும் தவிர்க்க வேண்டும். அவர்களை தங்களது கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். பொது மக்கள் விழிப்புடன் இருப்போம், விபத்தினை தடுப்போம்' என்று, அதில் குறிப்பிட்டு விழிப்புணர்வை ஏற்படுத் தியுள்ளனர்.