மேல்பாதி திரவுபதியம்மன் கோவில் வழிபாட்டிற்கு திறக்க ஏற்பாடுகள் தீவிரம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலில், கோர்ட் உத்தரவின்படி பொதுமக்கள் வழிபடுவதற்கு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, கடந்த 2023ம் ஆண்டு நடந்த தீமிதி விழாவில், இரு தரப்பினரிடையே வழிபாடு தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இரு தரப்பு மோதலால் விழுப்புரம் ஆர்.டி.ஓ., 145 தடை உத்தரவு பிறப்பித்தார். அதையடுத்து, கோவிலை மூடி சீல் வைக்கப்பட்டதுடன், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.கோவிலை திறக்க, ஒரு தரப்பினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதையடுத்து, கோர்ட்டின் இடைக்கால உத்தரவுபடி, கடந்தாண்டு மார்ச் 18ம் தேதி கோவில் திறக்கப்பட்டு, பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் அர்ச்சகர்கள் மூலம், தினமும் ஒரு கால பூஜை நடந்து வருகிறது.இதற்கிடையே இந்த வழக்கில் அண்மையில் உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட், 145 தடை உத்தரவை ரத்து செய்து, அனைத்து தரப்பினரும் கோவிலுக்குள் சென்று வழிபடவும், அனைத்து தரப்பினரையும் அழைத்து, சமாதான கூட்டம் நடத்தி, தீர்வு காண உத்தரவிட்டது.அதன்படி, கடந்த 19ம் தேதி விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அமைதிக் கூட்டம் நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.இரு தரப்பினரும், கோவிலுக்குள் சென்று, அமைதியாக வழிபடுவதென உறுதியளித்தனர்.இதனால், கோவில் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை வருவாய் மற்றும் காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன், வருவாய்த் துறையினர் முன்னிலையில், கோவிலில் துாய்மைப் பணி நடந்தது. மேலும், கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான பணிகள் நடந்தது.இப்பணிகள் முடிந்ததும், விரைவில் ஆர்.டி.ஓ., மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கோவில் திறந்து, வழிபாடு நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.