அரசு மாதிரி மகளிர் பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு
விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு பள்ளியில் பாதுகாப்பு அம்சம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., மாணவி செப்டிக் டேங்க்கில் விழுந்து இறந்த சம்பவத்தையடுத்து, அரசு உத்தரவின் பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்கள் தலைமையிலான குழுக்கள் ஆய்வு மேற்கொண்டது. பள்ளிகளில் பாதுகாப்பு கட்டமை ப்புகளை பார்வையிட்டு சீர்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.இதே போல், அரசு பள்ளிகளிலும், கல்வி அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தி, பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்கள், பள்ளியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், பள்ளி கழிவறை தொட்டி, மின் சாதனங்கள், இதர கட்டமைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வளாகத்தில் சேரும் குப்பைகளை தினசரி அகற்றவும், குடிநீர் இடங்களை தூய்மையாக பராமரிக்கவும், கழிப்பிட வளாக குறைபாடுகளை சீரமைக்கவும் அறிவுறுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர். சி.இ.ஓ., அறிவழகன் கூறுகையில், ஏற்கனவே, தனியார் பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் ஆய்வு செய்து, குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, அரசு பள்ளிகளிலும் ஆய்வு செய்து, பாதுகாப்பு அம்சங்களை சரியாக கடைபிடிக்க அறிவுறுத்தி வருகிறோம் என்றார்.