உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வழக்கறிஞர் மீது தாக்குதலை கண்டித்து விழுப்புரம், திண்டிவனத்தில் மறியல்

வழக்கறிஞர் மீது தாக்குதலை கண்டித்து விழுப்புரம், திண்டிவனத்தில் மறியல்

திண்டிவனம்: ஓசூரில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டியதை கண்டித்து, திண்டிவனத்தில் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஓசூரைச் சேர்ந்த கண்ணன், 30; வழக்கறிஞர். இவர், நேற்று முன்தினம் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் குமாஸ்தா ஆனந்தகுமார், 39; என்பவரால் பட்டப்பகலில் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார்.இதை கண்டிக்கும் வகையில் நேற்று காலை 11:15 மணியளவில் திண்டிவனம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் சண்முகம், தயாளன் தலைமையில் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடந்தது.திண்டிவனம் - சென்னை சாலையில் நடந்த போராட்டத்தில் வழக்கறிஞர்கள் விஜயன், செந்தில், சேகர், செல்வம், ஜெயப்பிரகாஷ் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், காயமடைந்த கண்ணனுக்கு அரசு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.ஈடுபட்டவர்களிடம், இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு மறியல் 11:30 மணிக்கு கைவிடப்பட்டது.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் நீதி மன்றம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வழக்கறிஞர் சங்கத் தலைவர் சங்கரன் தலைமையில் செயல் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் செயலாளர் வீரவேல், ராஜபாண்டியன், பொருளாளர் பிரகாஷ், வழக்கறிஞர்கள் எழிலரசி, சந்தியா, மோகன், ஞான பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழுப்புரம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று மற்றும் இன்று விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிகளை புறக்கணிப்பது என கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் நேற்று காலை 10:30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தலைவர்கள் காளிதாஸ், சகாதேவன், பன்னீர்செல்வம் தலைமை தாங்கினர். இணை செயலாளர்கள் அரிகிருஷ்ணன், கார்மேககண்ணன், கோகிலா, சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, 10:45 மணிக்கு மறியலை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை