கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு பொதுமக்கள் சாலை மறியல்
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரத்துார் கிராமத்தில், பிரதான சாலையில் மந்தக்கரை அருகே, தனி நபர் ஒருவர் பொது கழிவு நீர் வாய்க்காலை அடைத்து ஆக்கிரமித்து ெஷட் கட்டியிருந்தார். இது குறித்து பொதுமக்கள் பல தடவை முறையிட்டும், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று காலை 8:30 மணியளவில் அப்பகுதி மக்கள், மந்தக்கரை முண்டியம்பாக்கம்-லட்சுமிபுரம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி தாசில்தார் செல்வமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், பி.டி.ஓ., நாராயணன், வருவாய் ஆய்வாளர் தமிழரசன், ஊராட்சி செயலாளர் சிவா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கழிவு நீர் வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து மறியலை கை விட்டு மக்கள் கலைந்து சென்றனனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.