உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலை போடாததால் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் கடும் அவதி

சாலை போடாததால் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் கடும் அவதி

திண்டிவனம்: திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணி முடிவடைந்து, பல மாதங்களாகியும், சாலை போடப்படாததால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி வருகிறது. நகரின் மையப்பகுதியான நேரு வீதி, மிக முக்கியமான சாலையாக உள்ளது. இந்த சாலையில் காய்கறி மார்க்கெட், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலை ஒரு வழி பாதையாகும். இதற்கு மாற்று பாதையாக புதுமசூதி வீதியை, வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த புது மசூதி வீதியில் பாதாள சாக்கடை பணி, முடிவடைந்து பல மாதங்கள் ஆகி விட்டது. இந்த வீதியில், 500 மீ., சாலை போடும் பணியை, நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. அதற்கு மாற்றாக பெயரளவிற்கு கருங்கல் ஜல்லியை கொண்டு, கலவையை மட்டும் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கொட்டி விட்டு சென்றுள்ளனர். அந்தக் கருங்கல் ஜல்லிகள் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்களை பதம் பார்ப்பதால், புது மசூதி வீதியை வாகன ஓட்டிகள் பயன்படுத்தாமல் நேரு வீதி ஒரு வழிப்பாதை என்று தெரிந்தும் வாகன ஓட்டிகள் பயணம் செய்கின்றனர். இதனால் எதிர் திசையில் செல்லும் வாகனங்களால், காலை மற்றும் மாலை நேரங்களில் தாசில்தார் அலுவலகம் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதேபோல பஸ்களும் ஒரு வழி பாதை என வைக்கப்பட்டுள்ள பேரிகார்டிற்கு அருகிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதும், இறக்குவதுமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் குண்டும் குழியுமாக, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள புது மசூதி வீதியின், 500 மீட்டர் துாரத்தை விரைந்து சாலை அமைத்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி