ரயில்வே காலனி பழுதடைந்த கட்டடம் சமூக விரோதிகள் கூடாரமானது
விழுப்புரம் : விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனி பகுதியில் ரேஷன் கடை இயங்கிய கட்டடம் தற்போது பாழடைந்து வீணாகி வருகிறது. விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனியில் உள்ள ஒரு கட்டடத்தில் பல ஆண்டுகளாக ரேஷன் கடை இயங்கி வந்தது. இந்த கட்டடத்தில் உள்ள சீமை ஒடுகள் பெயர்ந்து, மழை காலங்களில் அதன் மூலம் தண்ணீர் கடைக்குள் வந்தது. இதனால் கடை விற்பனைாளர்கள் மூலம் அங்கிருந்த அத்தியாவசிய பொருட்கள் மூட்டையை பாதுகாக்க முடியாமல் திணறினர்.இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த கட்டடத்தில் இயங்கிய ரேஷன் கடை, தாயுமானவர் வீதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. ரேஷன் கடை இயங்கிய பழைய கட்டடம் தற்போது குடிகாரர்கள் மற்றும் சூதாட்டம் விளையாடுவோரின் கூடாரமாக மாறியுள்ளது. அப்பகுதியில் தெரு விளக்குகளும் இல்லாததால், இரவு நேரங்களில் இருட்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பழுதடைந்த ரேஷன் கடை இயங்கி வந்த கட்டடம் சமூக விரோதிகளின் பிடியில் இருந்து மீட்க ரயில்வே அதிகாரிகள் கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும்.