உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதிய பஸ் நிலையம் எதிரில் புளியமரங்கள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

புதிய பஸ் நிலையம் எதிரில் புளியமரங்கள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

திண்டிவனம்: தினமலர் செய்தி எதிரொலியால், திண்டிவனம் புதிய பஸ் நிலையத்தின் எதிரில் போக்குவரத்திற்கு தடையாக இருந்த இரண்டு புளிய மரங்கள் அகற்றப்பட்டன. திண்டிவனம்-சென்னை சாலையில் நகராட்சிக்கு சொந்தமான 6 ஏக்கர் பரப்பளவில், ரூ.27 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டது. புதிய பஸ் நிலையத்தின் பணிகளை விரைந்து முடித்து திறப்பு விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பஸ் நிலையத்தின் நுழைவாயிலில் தடையாக உள்ள இரண்டு புளிய மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்; பஸ் நிலையத்தின் உள்ளே டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்; என்பதை வலியுறுத்தி, நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் படத்துடன் விரிவாக செய்தி வெளியாகியிருந்தது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு வந்த உடன், வனத்துறை அனுமதியுடன், நேற்று மாலை, புதிய பஸ் நிலையத்தின் எதிரில், மெயின்ரோட்டையொட்டி இருந்த இரண்டு புளியமரங்கள் ஜே.சி.பி.,இயந்திரம் மூலம் அடியோடு அகற்றப்பட்டன. மேலும், புதிய பஸ் நிலையத்தின் உள்ளே மின்துறை சார்பில் புதிய டிராஸ்பார்மர் அமைக்கும் பணி இந்த மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி