சம்பா பட்ட நெல் விதைகள்; மானிய விலையில் விநியோகம்
வானுார்; திருச்சிற்றம்பலம் வேளாண் விரிவாக்க மையத்தில் சம்பா பருவ நெல் விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வானுார் தாலுகாவில் சம்பா பருவத்தில் 5,100 ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய இலக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து சம்பா பருவ நெல் விதைகளான சி.ஆர்.1009, சப்-1 கிளியனுார், பரங்கினி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சிற்றம்பலம் வேளாண் விரிவாக்க மையத்தில் நெல் விதைகளை வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ், விவசாயிகளுக்கு வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், 'சம்பா பருவ விதைகள் ரகம் 150 நாட்கள் வயது உடையது. அதிக நீர் தேங்கும் பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நடவு செய்ய சிறந்த ரகமாகும். சங்கராபரணி ஆற்றங்கரை ஓரம் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள விவசாயிகள் இந்த ரகத்தை தேர்வு செய்து நடவு செய்யலாம். ஏக்கருக்கு 2500 கிலோ மகசூல் தரவல்லது. தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் கிலோவிற்கு 20 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் சம்பா பருவத்திற்கு உகந்த நெல் ரகமான பாபட்டலா 5204, ஆடுதுறை 39 போன்ற ரகங்கள் இன்னும் 10 நாட்களுக்குள் இருப்பு வைத்து விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விதைகள் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்' என்றார்.