சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சின்னசெவலை காலனி முதல் தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் சாலை போடப்படாததால் மண் பாதையாகவே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதியில் சாலை அமைத்து தரக்கோரி கலெக்டர் அலுவலகம் மற்றும் திருவெண்ணெய்நல்லுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வருவதால் அப்பகுதி முழுதும் தண்ணீர் சூழ்ந்து குளம் போல் காணப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வயதானவர்கள், பள்ளி, கல்லுாரிக்குச் செல்லும் மாணவர்கள் அவ்வழியை கடந்து செல்ல முடியாமல் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். பலமுறை மனு அளித்தம் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று அப்பகுதியில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இனியும் சாலை போடாவிட்டால் அப்பகுதி மக்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்த னர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.