உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோடை விடுமுறையில் தெருக்கூத்து பயிற்சி அரங்கேற்றம் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்

கோடை விடுமுறையில் தெருக்கூத்து பயிற்சி அரங்கேற்றம் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்துள்ளது நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமம், 40 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே இக்கிராமத்தை ஆசிரியர் கிராமம் என அழைத்தனர். 80 சதவீதம் வீடுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அரசு பணியில் இருந்தனர். குறிப்பாக நாற்பது ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இங்கிருந்து உருவாகி உள்ளனர்.இந்த ஊரை சேர்ந்தவர்கள் பல்வேறு ஊர்களில் தொழிலதிபர்கள், நீதிபதி, அரசு அதிகாரிகள் என கல்வியினால் உயர்வு பெற்றுள்ளனர். பெங்களூரில் இருக்கும் இந்த கிராமத்தை சேர்ந்த மாணவி சிந்துாரா சர்வதேச அளவில் ஏ.ஐ., மற்றும் ரோபோடிக் தொழில் நுட்பத்தில் உலக அளவில் சாதனை படைத்து, ஜனாதிபதியிடம் விருது பெற்றுள்ளார்.வேலை, தொழில் என பலர் ஊரை விட்டு சென்றிருந்தாலும், கிராமத்தில் உள்ள வீட்டையும், கிராம வாழ்க்கையும் தொலைக்காமல் திருவிழா, கோடை விடுமுறைக்கு சொந்த கிராமத்திற்கு வந்து விடுகின்றனர்.இங்குள்ள குடும்பத்தினர் கல்வியினால் வசதி பெற்றிருந்தாலும் பாரம்பரிய கலைகளின் ஒன்றான கர்நாடக இசைவழி தெருக்கூத்தை முறைப்படி பயிற்று வித்து கோவில் விழாக்களில் உள்ளூரை சேர்ந்தவர்களே தெருக்கூத்து நடத்துகின்றனர்.பட்ட படிப்பு படித்து பல்வேறு வேலைகளில் உள்ள இளைஞர்களும் தெருக்கூத்து பயின்று தெருக்கூத்து நடத்துகின்றனர்.இந்த ஆண்டு முதன் முறையாக பள்ளி கோடை விடுமுறையில் உள்ள மாணவர்கள், தெருக்கூத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடம் முறைப்படி பயின்று கடந்த 24ம் தேதி இரணியன் சம்ஹாரம் மற்றும் சரதேவி பூஜை உள்ளிட்ட தெருக்கூத்தை அரங்கேற்றம் செய்துள்ளனர்.மொபைல் போனில் நேரத்தை செலவழித்து, எதர்த்தமான வாழ்க்கையை தொலைத்து விட்ட இன்றைய இளைஞர்கள் மத்தியில், இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கூத்து கலையை கற்று, அனைத்து கதாபாத்திரங்களையும் தாங்களே ஏற்று தெருக்கூத்தை அரங்கேற்றம் செய்தனர்.இந்நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், வெளி ஊர் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி கவுரவித்தனர்.கலாசாரத்தை சீரழிக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் பாரம்பரிய கலாசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தெருக்கூத்து கலையை பள்ளி மாணவர்கள் கற்று அரங்கேற்றம் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ