செஞ்சி கோட்டை சென்டிமெண்ட் அரசியல் பிரமுகர்கள் கலக்கம்
செஞ்சி கோட்டைக்குச் செல்லும் அரசியல் வாதிகள் ஆட்சியையும், பதவியையும் இழப்பார்கள் என்ற சென்டிமெண்ட் பல ஆண்டாக இருந்து வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், செஞ்சி கோட்டையில் சுற்றுலா விழா நடத்தினர். விழா முடிந்து 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியடைந்தது. விழாவை முன்னின்று நடத்திய அப்போதைய எம்.எல்.ஏ., ஏழுமலைக்கு மறுமுறை கட்சியில் சீட் வழங்கப்படவில்லை.அடுத்து தி.மு.க., ஆட்சியில் 2010ம் ஆண்டு சுற்றுலா விழா நடத்தினர். இவர்களும் 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை இழந்தனர். எம்.எல்.ஏ., கண்ணனுக்கும் மறுமுறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கோகுலஇந்திரா செஞ்சி கோட்டைக்கு வந்து சென்றார். அடுத்த சில மாதங்களில் அவரும் அமைச்சர் பதவியை இழந்தார்.இதன் பிறகு செஞ்சி கோட்டைக்கு சென்று வந்தால் பதவி பறிபோகும் என்ற பேச்சு அரசியல் கட்சியினர் மத்தியில் நிலவியது. இதனால் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சியில் எந்த அரசு நிகழ்ச்சியும் செஞ்சி கோட்டையில் நடத்தவில்லை. இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு செஞ்சி கோட்டையில் மரபு நடை விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் மஸ்தான் பங்கேற்றார். விழா முடிந்த சில மாதங்களில் மரக்காணம் கள்ளச்சாராய சம்பவம் அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.கடந்த 21ம் தேதி செஞ்சி கோட்டையில் நடந்த பாரம்பரிய விழாவில் பங்கேற்ற அமைச்சர் மஸ்தானின் பதவி அடுத்த 7 நாட்களில் பறிபோனது. இச்சம்பவம், அரசியல் கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.