ரூ.20 லட்சம் செக் மோசடி சித்தா டாக்டருக்கு சிறை
திண்டிவனம்:அரசு சித்தா டாக்டருக்கு, 20 லட்சம் ரூபாய் காசோலை மோசடி வழக்கில், இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், ராமதாஸ் நகரை சேர்ந்தவர் சுப்ராயலு, 57, கே.ஆர்.எஸ்., பில்டர்ஸ் உரிமையாளர். இவர், கடலுார், ஜனலட்சுமி நகரைச் சேர்ந்த அரசு சித்தா டாக்டர் செந்தில்குமார், 55, என்பவருக்கு, சித்த மருத்துவமனை கிளினிக்கை புதுப்பித்து கட்டடம் கட்ட, 20 லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார். பணத்தை கேட்ட சுப்பராயலுவிடம், செந்தில்குமார், 20 லட்சம் ரூபாய் காசோலையை, 2021, ஜூன், 6 தேதியிட்டு கொடுத்தார். காசோலையை திண்டிவனம் வங்கியில் சுப்ராயலு செலுத்தினார். செந்தில்குமார் வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பியது. சுப்பராயலு, திண்டிவனம் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில், செந்தில்குமார் மீது வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி இளவரசி, செந்தில்குமாருக்கு, இரு ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.