உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம்

முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம்

முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து வரும் புகார்கள் மீது பிரம்மதேசம் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மழுப்பி அனுப்புவதால் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பி வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் காவல் நிலையத்தில் சில மாதங்களாக பாதிக்கப்பட்டவர்கள் ஒரு புகார் கொடுத்தால், முறையாக விசாரணை நடத்தப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.சில புகார்கள் மீது சி.எஸ்.ஆர்., போடுவதுடன் சரி அதன் பின் விசாரணை மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பு செய்கின்றனர்.இதனால் புகார்தரர்கள் வெறுத்துப்போய், முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுக்கின்றனர். அவ்வாறு பெறப்படும் புகார்கள் தனிப்பிரிவில் இருந்து திண்டிவனம் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. டி.எஸ்.பி., அலுவலகத்தில் அந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்து புகார் குறித்து தகவல் தெரிவிக்க உரிய காவல் நிலையத்திற்கு உத்தரவிடுகின்றனர்.இது போன்று வரும் புகார்கள் மீது மனுதாரர், எதிர் மனுதாரருக்கு சம்மன் அனுப்பி அதன் பின் விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஆனால் பிரம்மதேசம் போலீசார் விசாரணை செய்யாமலே சம்மன் அனுப்பியும் புகார்தாரர், எதிர்மனுதாரர்கள் ஆஜராகவில்லை என தகவலை தயார் செய்து, உட்கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பி விடுகின்றனர்.முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுத்தவர்கள் புகாரின் தன்மையை அறிய ஆன்லைனில் பார்த்தால் புகார் முடித்து வைக்கப்பட்டதாக தகவல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர்.இதேபோன்று வருவாய்த் துறையிலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து வரும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனர். இதனால் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் அளித்தும் எவ்வித பலனும் இல்லை என அரசு மீது மக்கள் அதிருப்தி அடையும் நிலை இருந்து வருகிறது.இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவில் உள்ள தனி செயலர் ஆய்வு மேற்கொண்டு வருவாய் துறை, காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. --நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை