மாநில யோகாசன போட்டி விழுப்புரம் மாவட்ட அணி தேர்வு
விழுப்புரம் : தமிழ்நாடு மாநில 38வது யோகாசன சாம்பியன் போட்டிக்காக, விழுப்புரம் மாவட்ட அணி தேர்வு மற்றும் திறந்தநிலை மாவட்ட யோகாசன போட்டியும் நடந்தது. விழுப்புரத்தில் நேற்று முன்தினம் காலை 9.30 மணி முதல் 11:00 மணி வரை திறந்தநிலை மாவட்ட யோகாசன போட்டியும், 11:30 முதல் மாலை 4:15 மணி வரை மாவட்ட அணி தேர்வும் நடந்தது. தமிழ்நாடு யோகாசன சங்க பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் கிருபாகரன் ஆகியோர் போட்டியாளர்களை தேர்வு செய்தனர். இதில், 8 முதல் 45 வயதிற்கு மேற்பட்டோர் வரை தனித்தனி பிரிவுகளாக பத்து யோகாசனங்கள் மூலம் மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வாகிய 36 பேர், விழுப்புரம் மாவட்ட அணி சார்பில், வரும் 30, 31ம் தேதிகளில் கொடைக்கானலில் நடைபெற உள்ள தமிழ்நாடு மாநில 38வது யோகாசன சாம்பியன் போட்டியில் பங்கேற்க உள்ளனர். திறந்த நிலை மாவட்ட யோகாசன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.