மண்டல விளையாட்டில் மாணவர்கள் அசத்தல்
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழக விளையாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற பாரதியார் மற்றும் சுதந்திர தின போட்டியில், திருவெண்ணைநல்லுார் போன் நேரு பள்ளி மாணவர்கள், மண்டல அளவில் வெற்றி பெற்றனர். இதன்படி, 14 வயதுக்குட்பட்ட பிரிவு செஸ் போட்டியில் மாணவர் அஸ்வின் ராஜ் மூன்றாம் இடத்தை பிடித்தார். பூப்பந்தாட்ட போட்டி ஆண்கள் பிரிவில் ரோகித், சாய் தருண், நரேஷ், புவனேஸ்வரன், மகாவிஷ்ணு, நிவாஸ், ரவிவர்மன், ஆதித்யா, பவித்ரன் மற்றும் சபரிநாதன் ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பெற்றனர். இறகு பந்து போட்டி ஒற்றையர் பிரிவில் கிருஷ்ணா இரண்டாம் இடத்தையும், இரட்டையர் பிரிவில் கிருஷ்ணா மற்றும் சசிதரன் ஆகியோர் இரண்டாம் இடத்தை பெற்றனர். பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு, பள்ளியின் நிர்வாக இயக்குநர் விஜயசாந்தி தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சுகன்யா வரவேற்றார். பள்ளி தாளாளர் வாசுதேவன், சிறந்த மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டினார். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்து, உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.