மாவட்டத்தில் 600 பள்ளி வாகனங்கள் ஆய்வு!போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிரம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அளவிலான தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு பணியினை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் ஆய்வு செய்தார். விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில், வட்டார போக்குவரத்துத் துறை சார்பில், மாவட்ட அளவிலான தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு, நேற்று காலை நடந்தது. இப்பணியினை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது; விழுப்புரம் மாவட்டத்தில், 2026 - 2027 ம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் துவங்குவதற்கு முன்பாக, பள்ளி வாகனங்கள் (ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள் 2012ன்படி, கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளி கல்வி நிறுவன வாகனங்களும், விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டன. இவை அனைத்து பொதுச்சாலையில் இயக்கத் தகுதியாக உள்ளதா என்பதை பல்துறை அலுவலர்கள் குழு மூலம் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம் ஆகிய வட்டங்களில் செயல்படும் 75 பள்ளிகளில் உள்ள 281 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில், திண்டிவனம், வானுார், மரக்காணம் ஆகிய வட்டங்களில் செயல்படும் 43 பள்ளிகளில் உள்ள 227 பள்ளி வாகனங்கள் மற்றும் செஞ்சி மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் சார்பில் செஞ்சி, மேல்மலையனுார் ஆகிய வட்டங்களில் 25 பள்ளிகளில் உளள 92 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 143 தனியார் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் 600 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதேபோல், வாகனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இருக்கையின் அளவிற்கு மட்டுமே குழந்தைகளை ஏற்றிச்செல்ல வேண்டும். பள்ளியிலிருந்து குழந்தைகள் வீட்டுக்குச் செல்லும்போது, சாலையை கடந்து குழந்தைகள் செல்லும் நிலை இருந்தால், பள்ளி வாகனத்தை நிறுத்தி உதவியாளர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக சாலையை கடந்து சென்றபின் பள்ளி வாகனத்தை இயக்க வேண்டும். பள்ளி வாகனங்களை திருப்பும்போதும், பின்புறமாக வாகனம் வரும்போதும், டிரைவர் மற்றும் உதவியாளர் வாகனத்தின் பின்புறம் குழந்தைகள் இருக்கிறார்களாக என்பதை பார்த்துவிட்டு, பாதுகாப்பாக வாகனத்தை திருப்பி எடுத்துச் செல்ல வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் வாகனங்களை அவ்வப்பொழுது, ஆய்வு செய்து வாகன டிரைவர்கள், உதவியாளர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி, பாதுகாப்பாக வாகனத்தை இயக்க வலியுறுத்த வேண்டும் என கூறினார். ஆய்வு தொடர்ந்து, தீயணைப்புத்துறையின் சார்பில், தீ தடுப்பு தொடர்பான விளக்கவுரை மற்றும் டிரைவர்களுக்கு செயல்முறை விளக்கம் வழங்கப்பட்டது. தனியார் கண் மருத்துவமனை மூலம் வாகன டிரைவர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஆய்வின்போது, திண்டிவனம் சப் கலெக்டர் (பொ) காதர்அலி, விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் உதயசூரியன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகவேல், முருகேசன், கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.