உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் 3வது புத்தக கண்காட்சி...துவங்கியது; பல்வேறு நிகழ்ச்சிகளுடன் களைகட்டுகிறது

விழுப்புரத்தில் 3வது புத்தக கண்காட்சி...துவங்கியது; பல்வேறு நிகழ்ச்சிகளுடன் களைகட்டுகிறது

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி திடலில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 3வது புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், லட்சுமணன், அன்னியூர் சிவா, மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணை சேர்மன் ஷீலாதேவி சேரன், எஸ்.பி., சரவணன், டி.ஆர்.ஓ., அரிதாஸ், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், நகர் மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் சித்திக் அலி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க இணை செயலாளர் லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.அமைச்சர் பொன்முடி, புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து பேசுகையில், 'புத்தக கண்காட்சி மூலம் மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் உருவாகும். இதனால், மனதில் சீர்திருத்த கருத்துக்கள் தோன்றி சிறந்ததொரு சமூகம் அமையும். புத்தகங்கள் படிக்கும்போது, மனம் ஒருநிலைபடுவதால், உடல் நலனும் பாதுகாக்கப்படும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் தினசரி நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். அப்போது தான், உலகளாவிய அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடியும். போட்டி தேர்வுக்கு தயாராவோர் இந்த புத்தக கண்காட்சியை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.புத்தக கண்காட்சி வரும் 12ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடக்கிறது. பல்வேறு தலைப்புகளில் 86க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 22 அரசு துறைகள் சார்ந்த அரங்குகள் உள்ளன. உள்ளூர் படைப்பாளிகளின் நுால்கள் கொண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. அரங்குகளில் பிரபல எழுத்தாளர், தலைவர்களின் கதைகள், கவிதை, கட்டுரைகள் அடங்கிய பல்லாயிரக்கணக்கான நுால்கள் இடம்பெற்றுள்ளன.தினமும் தகவல் தொடர்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உரை நிகழ்வுகள், பல்வேறு தனித்திறன் போட்டிகளும் நடக்கிறது. மேலும் மாலை நேரங்களில் பல்வேறு எழுத்தாளர்கள், சிறப்பு பேச்சாளர்களின் பட்டிமன்றம், சொற்பொழிவு நடக்கிறது.பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிறு தானியங்களால் செய்த உணவு அரங்குகள், துறை சார்ந்த கண்காட்சி அரங்குகள், உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.மேலும், கலை, பண்பாடு, பாரம்பரியம், அறிவியல், வணிகம், பொருளாதாரம், வரலாறு, கவிதைகள் உள்ளிட்ட தலைப்புகளில் புத்தகங்கள் மற்றும் அரசு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.

புத்தகங்கள் தானம்

விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு சிறைச் சாலையில் உள்ள, கைதிகள் நல்ல புத்தகங்களை வாசித்து, தங்கள் மனநிலையை மாற்றி கொண்டு வெளியே சென்று திருந்தி வாழ்வதற்காக காவல் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புத்தக கண்காட்சியில் போலீஸ் தரப்பில் சிறைவாசிகளுக்கு புத்தகங்களை பெறுவதற்காக தனி அரங்கு அமைத்து புத்தக தானம் செய்வதற்கான பெட்டி வைத்துள்ளனர். பெட்டியில், பொதுமக்கள் வாங்கி போடும் புத்தகங்கள் சிறைவாசிகள் படிக்க அனுப்பி வைக்கப்பட உள்ளது. நேற்று 15க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெட்டியில் சேர்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி