உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கள் தடையால் ஆட்சியாளர்களுக்கு ஆதாயம்

கள் தடையால் ஆட்சியாளர்களுக்கு ஆதாயம்

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம் பூரிக்குடிசையில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் மாநாடு நேற்று நடந்தது. 'கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை மீட்பு போராட்டம்' என்ற பெயரில் நடந்த மாநாட்டுக்கு, மாநிலத் தலைவர் நல்லசாமி தலைமை தாங்கி, பனை மரத்திற்கு படையலிட்டு, கள் இறக்கினார். பின்னர் அவர் கள் அருந்தி, உரிமை மீட்பு போராட்டத்தை துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் வரவேற்றார்.மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பனை ஓலையால் செய்த தொன்னையில் மேடையிலேயே கள் அருந்தி, அதன் பிறகு தனது பேச்சை துவக்கினார். மாநாட்டில், தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி தலைமை தாங்கி பேசியதாவது.கள் இறக்கும் உரிமையை 1987ல் அரசு பறித்துக் கொண்டது. கள்ளில் கலப்படம் செய்வதாக கூறி, தடை செய்தது. அன்று முதல் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். கள் நம் உணவு, நமது உரிமை. கள்ளை 48 நாட்கள் சாப்பிட்டால் நம் உடலில் உள்ள பல்வேறு நோய்களை தடுக்கிறது. ஒரு அரசின் கடமை குடிமக்களுக்கு சத்தான உணவை வழங்குவது. இரண்டாவது வாழ்க்கை தரத்தை உயர்த்துவது, மூன்றாவது உடல் நலத்தை பேணுவது. தொடர்ந்து மதுவை குடித்து அடிமையாய் இருக்கும் ஒருவருக்கு இந்த கள் அருமருந்தாகும். நாங்கள் கள் விற்க, இறக்க அனுமதி கேட்கவில்லை. எங்கள் உரிமையை நாங்களே எடுத்துக் கொள்கிறோம். எம்.ஜி.ஆருக்கு பின்பு வந்த ஆட்சியாளர்கள் கள் தடையால் பெரும் ஆதாயத்தை பெற்று வருகின்றனர். இதற்கு ஒரே தீர்வு, வாக்காளர்களாகிய நாம் கையில் தான் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ