திண்டிவனம் மேம்பால கீழ்பகுதி குப்பை மேடாகி வரும் அவலம்
திண்டிவனம்: திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதி குப்பை மேடாகி வருவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் பஸ் ஸ்டாண்டு உள்ளது. இங்கு, தினம்தோறும் ஆயிரக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நகராட்சி தடையை மீறி ஏராளமான நடைபாதை கடைகள் ஆக்கிரமித்துள்ளது.இந்த கடைகளை அப்புறப்படுத்தி, வேறு இடத்தில் புதியதாக இடம் தேர்வு செய்து கடைகள் ஒதுக்கி தருவதற்கு நகராட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால் நடைபாதை வியாபாரிகள் புதிய இடத்திற்கு போகாமல், மேம்பாலத்தின் கீழ்பகுதியிலேயே கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். இப்பகுதி ஆக்கிரமிப்பு கடைக்களில் வெளியேற்றப்படும் இருந்து தினசரி கழிவுகள் அனைத்தும், மேம்பாலத்தின் கீழ்பகுதியில் கொட்டி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர். நீண்ட நாள் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டு, பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, நகராட்சி அதிகாரிகள் மேம்பாலத்தின் கீழ் குவிந்துள்ள குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.