உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தின் ஒரே தொழிற்பேட்டை மையம் தொழில் முடங்கி மதுபான கூடமாகிய அவலம்

விழுப்புரத்தின் ஒரே தொழிற்பேட்டை மையம் தொழில் முடங்கி மதுபான கூடமாகிய அவலம்

வி ழுப்புரம் அருகே தொழிற்பேட்டை மையத்தில், தொழில்கள் முடங்கி, திறந்தவெளி பாராக மாறிப் போனது. விழுப்புரம், ஜானகிபுரம் பகுதியில் 10 ஆண்டுகளாக 4 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தினசரி காலை முதல் நள்ளிரவு வரை இந்த பகுதிக்கு 500க்கும் மேற்பட்டோர் மது அருந்தவும், மது வாங்கவும் வந்து செல்கின்றனர். நெடுஞ்சாலைக்கு அருகே மதுக்கடைகளுக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும், முக்கிய 4 தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்குமிடத்தில் தடையின்றி மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இதனால், தந்தை பெரியார் நகர், சாலாமேடு, ஜானகிபுரம், கண்டமானடி, கொளத்துார், அரியலுார், சாலாமேடு, ரெட்டிப்பாளைம், மேலமேடு, கண்டம்பாக்கம், மரகதபுரம், கண்டியமடை சுற்றியுள்ள கிராம மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'விழுப்புரம் நகரில் 4 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. ஜானகிபுரத்திலிருந்து விழுப்புரம் செல்ல வேண்டி இருந்ததால் குடிப்போர் எண்ணிக்கை சொற்பளவில் தான் இருந்தது. ஜானகிபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை வந்த பிறகு, நடந்தே சென்று வாங்கிவிடலாம், மேலும் முள்தோப்பு, பனந்தோப்பு என காலி மைதானமாக உள்ளதால், தாராளமாக குடித்துவிட்டு அங்கேயே படுத்துவிடலாம் என்றும் பலர் கிடக்கின்றனர். இந்த பகுதியில், பல்வேறு ஊர்களிலிருந்து வந்து குடிக்கும் நபர்கள் சீட்டாட்டம் ஆடுவது, மிகப்பெரிய மோதல்களும், அடிக்கடி கொலையும் நடந்து வருகிறது. தொழிற்சாலை இல்லாத விழுப்புரத்தில், முதல் திட்டமாக தொழில்பேட்டை தொடங்கிய இடம் தான் ஜானகிபுரம் பகுதி. அந்த தொழிற்பேட்டையில் ஒன்றிரண்டு தொழிற்சாலை மட்டுமே இயங்கி வருகிறது. அதன் மையத்தில் தான் இந்த மதுக்கடைகள் இயங்கி வருகிறது. தொழிற்பேட்டை திட்டத்தை மேம்படுத்தாமல் புதராகி கிடக்கிறது. ஆனால், நல்ல வருவாய் வருகிறது என டாஸ்மாக் கடையை மேம்படுத்தி வருகின்றனர். இந்த டாஸ்மாக்கில் குடிக்க வரும் வெளி மாநில, வெளியூர் நபர்கள் திட்டமிட்டு, புறநகர் பகுதிகளில் திருட்டு, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றுவதாக போலீசாரே கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம், இங்குள்ள மதுக்கடைகளை அகற்றி, தொழிற்பேட்டையை, குடியிருப்புகளை மேம்படுத்த வேண்டும்.'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ