உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம், கடலுாரில் முதல்வர் அறிவித்த திட்டங்கள் நிறைவேறியது: செயல்பாட்டிற்கு வந்த ரூ.424 கோடியிலான பணிகள்

விழுப்புரம், கடலுாரில் முதல்வர் அறிவித்த திட்டங்கள் நிறைவேறியது: செயல்பாட்டிற்கு வந்த ரூ.424 கோடியிலான பணிகள்

- நமது நிருபர் -

விழுப்புரம், கடலுார் மாவட்டங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டங்களை முழுமையாக விரைந்து செயல்படுத்திட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். முதல்வர் அறிவித்தபடி, 424 கோடி ரூபாய் மதிப்பிலான 12 திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 491 கோடி ரூபாய் மதிப்பிலான 9 திட்டங்கள் நிலுவையில் உள்ளது.விழுப்புரத்தில், கடந்த ஜனவரி 28ம் தேதி, முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவரங்கம் மற்றும் இடஒதுக்கீடு சமூகநீதி போராளிகளுக்கான மணி மண்டபத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்திற்கான 11 புதிய வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தார். விழுப்புரம் அருகே வெள்ளத்தால் சேதமடைந்த, தளவானுார் அணைக்கட்டு 84 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும். கண்டமங்கலம் ஒன்றியத்தில், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே, வழுதாவூர் அருகில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும். காணை, கோலியனுார் ஒன்றிய கிராம மக்களுக்காக, 35 கோடி ரூபாய் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். விக்கிரவாண்டி பேரூராட்சியில், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், பல்நோக்கு சமுதாய கூடம் அமைக்கப்படும். விழுப்புரம் நகராட்சியின் பழைய அலுவலக கட்டடம், 2 கோடி ரூபாய் செலவில், டவுன் ஹாலாக மாற்றப்படும். வீடூர் அணையிலிருந்து மயிலம், பாதிரப்புலியூர் வழியாகச் செல்லும் 15 கி.மீ., துார சாலை 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த 6 திட்டப் பணிகள் துவங்கி, நடைபெற்று வருகிறது. செஞ்சி மற்றும் மரக்காணத்தில் தலா 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், புதிதாக துவங்கப்படும் என்ற அறிவிப்பு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், சாத்தனுார் அணையின் உபரி நீரை நந்தன் கால்வாயில் இணைப்பதற்கான ஊட்டு கால்வாய் அமைக்கப்படும். இதற்காக, 304 கோடி ரூபாய் செலவில் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு, அரசு அனுமதி வழங்குவது பரிசீலனையில் உள்ளது. விழுப்புரம் அடுத்த தென்னமாதேவி, அயனம்பாளையம் கிராமங்களில், பம்பை ஆற்றின் வடகரையில், சங்ககால தொல்பொருட்கள் கண்டறியப்பட்டது. இந்தப் பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. பம்பை ஆற்றின் வடகரை பகுதியை, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். இதன் பிறகு, அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கப்படவில்லை.திருவாமாத்துார் அபிராமேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருமண மண்டபம் அமைக்கப்படும். விழுப்புரம் சாலாமேடு பகுதி மக்களின் தேவைக்காக, 5 கோடி ரூபாய் செலவில், திருப்பாச்சனுார் ஆற்றுப் படுகையிலிருந்து குடிநீர் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த இரு திட்டங்களும் துவக்கப்படவில்லை.கடலுார் மாவட்டம் கடலுாரில் கடந்த பிப்ரவரி 21ம் தேி நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இவ்விழாவில், கடலுார் மாவட்டத்திற்கு முதல்வர் அறிவித்த 10 புதிய திட்டங்கள் அறிவித்தார். அதன்படி பண்ருட்டி தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லுாரி துவங்கி, செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முட்லுாரில் இருந்து சேத்தியாதோப்பு வரை 50 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் மற்றும் கெடிலம் ஆற்றங்கரையில் செம்மேடு, சிறுவத்துார் பகுதியில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வெள்ளத்தடுப்பு பணிகள் துவங்கியுள்ளது.கடலுார் தாலுகா தென்பெண்ணையாற்றங்கரை பகுதியில் 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் வீராணம் எரியில், 63.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் துவங்கியுள்ளது. குறிஞ்சிப்பாடியில் புதிதாக 6.50 கோடி ரூபாயில் தாலுகா அலுவலகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வெலிங்டன் நீர்தேக்கம் ஏரி கரைகள் பலப்படுத்திட, 130 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு, பூமி பூஜை போடப்பட்டது. அதன் பிறகு பணிகள் துவக்கப்படவில்லை.கடலுார் மாநகராட்சி, மஞ்சக்குப்பம் மைதானத்தில் 35 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் துவங்கி நடந்து வந்தது. பொதுநல வழக்கு காரணமாக, மைதானத்தில் கடைகள் கட்டுவதற்கு கோர்ட் தடை விதித்ததால், பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், கடலுார் திருவந்திபுரம் - எம்.புதுார் இடையில் 7 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கின்ற திட்டம் மற்றும் சிதம்பரத்தில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் நினைவிடம் புதுப்பிக்கும் திட்டம் ஆகியவை, அதிகாரிகள் ஆய்வு செய்ததோடு, அடுத்த கட்டத்திற்கு நகராமல் உள்ளது.விழுப்புரம், கடலுார் மாவட்டத்தில் முதல்வர் அறிவித்த 21 புதிய திட்டங்களில், 424 கோடி ரூபாய் மதிப்பிலான 12 பணிகள் துவங்கி, செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இரு மாவட்டங்களிலும் நிலுவையில் உள்ள 491 கோடி ரூபாய் மதிப்பிலான 9 பணிகளை விரைந்து செயல்படுத்திட, அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ரூ.491 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் நிலுவை

விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்வரால் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், 164 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில், 313 கோடி ரூபாய் மதிப்பிலான 4 திட்டப் பணிகள் நிலுவையில் உள்ளது. கடலுார் மாவட்டத்திற்கு முதல்வர் அறிவித்த திட்டங்களில், 206 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 172 கோடி ரூபாய் மதிப்பிலான 5 திட்டப் பணிகள் நிலுவையில் உள்ளன. இந்த திட்டங்களை விரைந்து துவக்கிட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்திட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kumar
டிச 26, 2025 15:46

ம்ம்ம்ம் மூணு மாசத்துக்கு ஒரு தடவ எலக்ஷன் வந்தா நல்ல இருக்கும் . நம்ம திராவிட மாடல் தலைவர் இத்து போன சாட்டையை சுழற்றி வேலை நடந்துடும் .


நரேந்திர பாரதி
டிச 26, 2025 14:24

ம்ம்ம்... ஆனா, என்ன என்னன்னு சொல்லமாட்டோம்...அதுதான் திராட மாடல்


புதிய வீடியோ