குண்டும் குழியுமான சாலை பொதுமக்கள் கடும் அவதி
விழுப்புரம்: விழுப்புரம் - அனிச்சம்பாளையம் செல்லும் சாலை குண்டும், குழியாக வாகன ஓட்டிகள் பயணிக்க லாயக்கற்ற நிலையில் உள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் - அனிச்சம்பாளையம் செல்லும் சாலையை குச்சிப்பாளையம், எருமனந்தாங்கல், அனிச்சம்பாளையம் மட்டுமின்றி, விழுப்புரத்தை சேர்ந்த பொதுமக்களும் பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில், அரசு பஸ்களும், டவுன் பஸ்களும் பயணிக்கிறது. அனிச்சம்பாளையம் செல்லும் சாலை, நகராட்சி மூலம் கடந்த பல மாதங்களுக்கு முன் தார் சாலையாக போடப்பட்டது. புதிய சாலை போடப்பட்டு சில தினங்களிலே பாதாள சாக்கடை பணிக்காக மீண்டும் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றது.இந்த பணிகள் முடிவடைந்து மாதங்கள் பல கடந்தும், அனிச்சம்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக வாகன ஓட்டிகள் பயணிக்க வழியின்றி காணப்படுகிறது. மழை காலங்களில் இந்த சாலையில் சேறும் ஆக்கிரமித்து கொள்வதால், பலர் அதில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். ஆட்டோக்களில் செல்லும் பள்ளி மாணவர்கள் அச்சத்தோடு செல்கின்றனர். இந்நிலையில், விரைவாக அதிகாரிகள் தார் சாலையாக மாற்றி தருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.