உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க.,மாநில தலைவர் அன்புமணியின் பதவி பறிப்பிற்கான பின்னணி காரணம்

பா.ம.க.,மாநில தலைவர் அன்புமணியின் பதவி பறிப்பிற்கான பின்னணி காரணம்

திண்டிவனம்: பா.ம.க.,நிறுவனர் ராமதாசிற்கும், அவரது மகனான அன்புமணிக்கும் ஏற்பட்டு வந்த பனிப்போர் காரணமாக, கட்சியின் தலைவராக இருந்து வந்த அன்புமணியின் பதவியை பறித்து, அவரை கட்சியின் செயல்தலைவராக நியமித்து, ராமதாசே கட்சியின் நிறுவனர் மற்றும் கட்சியின் தலைவரும் நான்தான் என்று தைலாபுரம் தோட்டத்தில் பிரகடனப்படுத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியையொட்டியுள்ள சங்கமத்திரா கன்வென்ஷன் ஹாலில் கடந்த ஆண்டு டிசம்பரில் பா.ம.க.,பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கட்சியின் நிறுவனரான ராமதாஸ், தனது மகள் வயிற்று பேரனான டாக்டர் பரசுராமனின் மகன் பொறியாளர் முகுந்தனை, பா.ம.க.,மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்து அறிவித்தார். இதற்கு மேடையில் இருந்த கட்சியின் தலைவர் அன்புமணி,எதிர்ப்பு தெரிவித்து, முகுந்தன் சமீபத்தில்தான் கட்சிக்கு வந்தார், அவருக்கு இந்த பெரிய பொறுப்பு ஏன் கொடுக்கிறீர்கள் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நான் அறிவித்தது அறிவித்ததுதான். நான் தான் கட்சியின் நிறுவனர், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யாராக இருந்தாலும், கவலையில்லை. இஷ்ட மிருந்தால் இருக்கலாம். இல்லையென்றால் வெளியேறலாம் என்று அன்புமணிக்கு பதில் கூறினார். அன்புமணியும் எதிர்ப்பு தெரிவித்து மைக்கை மேடையில் துாக்கி போட்டார். தொடர்ந்து, சென்னை பனையூரில் கட்சி அலுவலகம் இருப்பதாகவும், கட்சி நிர்வாகிகள் அங்கே வந்த பார்க்கலாம் என்று கூறி, அவருடைய மொபைல் எண்ணை அன்புமணி மேடையில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த பிரச்னைக்கு பிறகு, இருவருக்கும் மோதல் ஏற்பட்டு, கட்சியில் பிளவு ஏற்படும் நிலைக்கு சென்றது. பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அன்புமணியிடம் சமாதானம் செய்த பிறகு, பிரச்னை ஓரளவிற்கு முடிவிற்கு(தற்காலிகமாக) வந்தது. இப்படி இருந்தும், இருவருக்கும் முகுந்தன் நியமன விவகாரம் தொடர்பாக பனிப்போர் நீடித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக வழக்கமாக தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தரும் முகுந்தன் வருவதில்லை. புதிய பதவியான மாநில இளைஞரணி தலைவர் பதவியில் செயல்படாமல் முகுந்தன் முடங்கி கிடந்தார்.இந்நிலையில் பொதுவெளியில் அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த திண்டிவனம் முன்னாள் நகர செயலாளர் ராஜேஷ், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டு வந்ததாக வந்த புகாரின் பேரின், கட்சியின் நிறுவனரான ராமதாஸ் அதிரடியாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் வக்ப் சட்ட மசோதாவிற்கு, தமிழக சட்டமன்றத்தில் மத்திய அரசிற்கு எதிராக ஆளுங்கட்சி கொண்டு வந்த தீர்மானத்திற்கு பா.ம.க.,எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்த ராமதாசிடம், நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் வக்ப் சட்டத்திற்கு பா.ம.க.,வின் நிலைப்பாடு குறித்து கேட்ட போது, தமிழக சட்டமன்றத்தில் எதிரொலித்தது போல், நாடாளுமன்றத்திலும் பா.ம.க.வின் நிலைப்பாடு எதிரொலிக்கும் என்று கருத்து கூறினார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா ஓட்டெடுப்பிற்கு வந்த போது, ராஜ்யசபா உறுப்பினரான அன்புமணி, கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதன் மூலம் மத்திய அரசிற்கு மறைமுகமாக அவர் ஆதரவு தெரிவித்துவிட்டார்.இந்த சம்பவம் ராமதாசிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆரம்பத்திலிருந்து வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ராமதாஸ், அன்புமணியும் வக்ப் சட்ட திருத்ததிற்குஎதிராக வாக்களிப்பார் என்று நம்பியிருந்த நிலையில், கட்சியின் நிறுவனருக்கு எதிரான நிலைப்பாட்டை அன்புமணி எடுத்ததால், முஸ்லீம்கள் மத்தியில் ராமதாசிற்கு மதிப்பு குறையும் நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தைலாபுரத்தில் நேற்று நடந்த நிருபர்கள் சந்திப்பின் போது, கட்சியின் தலைவராக இருந்து வந்த அன்புமணியின் பதவியை அதிரடியாக பறித்து அவருக்கு டம்மி பதவியாக கட்சியின் செயல்தலைவர் பதவியை கொடுத்து, அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் ராமதாஸ். பா.ம.க.,வின் மாநில தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வந்த ஜி.கே.மணியின் பதவியை பறிக்கப்பட்டு, கட்சியின் தலைவராக அன்புமணி கடந்த 2022் ல் வந்தார். இந்த தலைவர் பதவியும், ராமதாஸ் குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாகத்தான், அவருக்கு கட்சியின் தலைவர் பதவியை ராமதாஸ் கொடுத்தார். தற்போது அந்த தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுவிட்டது. சென்னைக்கு(நேற்று) அமித்ஷா வந்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சிகளை சேர்ப்பது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில், அன்புமணியின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில், பா.ம.க.,யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற முடிவை அன்புமணியிடமிருந்து பறிக்கும் வகையில், கூட்டணிகுறித்து நான்தான்(ராமதாஸ்) முடிவு எடுக்க முடியும் என்ற நிலையை பா.ஜ.,விற்கு உணர்த்தும் வகையில்தான், கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் நான்தான் என்று ராமதாஸ் மறைமுகமாக தெரிவித்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலின் போது, ராமதாஸ் அ.தி.மு.க.,உடன் கூட்டணி குறித்த அறிவிப்புக்க வெளியாக இருந்த நிலையில், அன்புமணியின் நெருக்கடி காரணமாக கடைசிகட்டத்தில், பா.ஜ.,உடன் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் ராமதாசிற்கு ஏற்பட்டது. இதைகருத்தில் கொண்டு, பா.ம.க.,யாருடன் கூட்டணி என்று அறிவிக்கும் முடிவு தனக்குதான் உள்ளது என்று, அன்புமணியின் பதவி பறிப்பின் மூலம் ராமதாஸ் தெளிவாக வெளி உலகத்திற்கு காட்டியுள்ளார். வரும் மே.11 ம்தேதி மாமல்லபுரத்தில் பா.ம.க.,மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நேரத்தில், அன்புமணியின் பதவி பறிப்பு, அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது அன்புமணி பதவி பறிப்பின் மூலம், மாநில இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முகுந்தன் கை மீண்டும் ஓங்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.பாக்ஸ்நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு எதிரில்அன்புமணி ஆதரவாளர்கள் கோஷம் கட்சியின் தலைவராக இருந்து வந்த அன்புமணியின் பதவி நேற்று நிறுவனர் ராமதாசால் பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ராமதாசால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட திண்டிவனம் முன்னாள் நகர செயலாளர் ராஜேஷ் ஆதரவாளர்கள், திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் தெருவிலுள்ள ராமதாசின் வீட்டின் எதிரில்மீண்டும் அன்புமணிக்கு கட்சி தலைவர் பதவி வழங்க கோரி, கோஷம்போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்த வந்த, பா.ம.க.,மாவட்ட செயலாளர் ஜெயராஜிக்கும், அன்புமணி ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டதின் பேரில் மோதல் தவிர்க்கப்பட்டது. பதவி பறிப்பு குறித்துரகசியம் காத்த ராமதாஸ்பா.ம.க,நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் வழக்கமான நிருபர்கள் சந்திப்பின் போது, அதிரடியாக அன்புமணியின் பதவி பறிப்பு குறித்து அறிவிப்பை அறிவித்தார். அப்போது உடன் இருந்த மேட்டூர் எம்.எல்.ஏ.,சதாசிவம், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ஆகியோருக்கு தெரியாது. அதேபோல் வழக்கமாக முக்கிய அறிவிப்பு வெளியிடும் போது உடன் இருந்து வரும் கட்சியின் கவுரவ தலைவரான ஜி.கே.மணியும் உடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி