காவல் நிலையம் அமைப்பதற்கான இடம் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியது
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான இடம், வாகன நிறுத்திமிடமாக மாறியுள்ளது. ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, விழுப்புரம் மாவட்டம், கடந்த 1993ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், மாவட்டத்தின் அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. இங்கு கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், வட்ட அலுவலகங்கள் மற்றும் பிற முக்கிய அரசு துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. பெருந்திட்ட வளாகத்தின் பாதுகாப்பு பணியை, விழுப்புரம் தாலுகா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். தாலுகா போலீசார் தினமும் கலெக்டர் அலுவலகம், கோர்ட் பணிகள், ஆர்ப்பாட்டம் பாதுகாப்பு பணி மற்றும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகள் மீட்பு பணியை மேற்கொள்கின்றனர். நகராட்சியில் 19 வார்டுகள் மற்றும் 60 கிராமங்கள், தாலுகா போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், குற்ற சம்பவங்களை கண்காணிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த பிரச்னையை தவிர்க்கும் வகையில், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து பெருந்திட்ட வளாக அலுவலக நுழைவு வாயில் அருகே, (எம்.எல்.ஏ., அலுவலக பின்புறம்) இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை காவல்துறை உயர் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்துள்ளனர். அதன்பிறகும், புதிய காவல் நிலையம் அமைப்பதற்கான கோப்பு, பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. புதிய காவல் நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம், குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான இடமாக மாறியுள்ளது.