மேலும் செய்திகள்
கணவன் இறந்த துக்கம் நெஞ்சு வலியால் மனைவி சாவு
14-Mar-2025
செஞ்சி: செஞ்சி அருகே பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், கணவன், மனைவி, மகள் என, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் துரைக்கண்ணு, 47; கட்டட மேஸ்திரி. இவரது மனைவி பச்சையம்மாள், 45, மகன் குணசேகர், 21, மகள் கோபிகா, 19.துரைக்கண்ணுவின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ராஜாம்புலியூர்.ஒரு மாதம் முன் பைக் விபத்தில் காயமடைந்து வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜாம்புலியூரைச் சேர்ந்த துரைக்கண்ணுவின் அண்ணன் நந்தகோபால் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.அவரது இறுதி சடங்கில் பங்கேற்க, துரைக்கண்ணு, பச்சையம்மாள், கோபிகா ஆகியோர் ஒரு பைக்கிலும், குணசேகர் ஒரு பைக்கிலும் அதிகாலை 2:00 மணிக்கு மதுரவாயலில் இருந்து ராஜாம்புலியூருக்கு புறப்பட்டனர். துரைக்கண்ணு ஓட்டி வந்த பைக், நேற்று அதிகாலை, 5:15 மணியளவில் செஞ்சி - திண்டிவனம் மெயின் ரோடு, தொண்டி ஆற்றுப்பாலத்தை கடந்து வந்த போது, பொன்னங்குப்பம் கிராமத்தில் இருந்து சென்னைக்கு சென்ற அரசு பஸ், பைக் மீது வேகமாக மோதியது. இதில், படுகாயமடைந்த துரைக்கண்ணு, பச்சையம்மாள், கோபிகா சம்பவ இடத்திலேயே இறந்தனர். கோபிகா சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு மாணவி. தகவலறிந்த செஞ்சி போலீசார், மூன்று பேரின் உடல்களையும் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து அரசு பஸ் டிரைவர் பாஸ்கர், 56, என்பவரை கைது செய்தனர்.இறந்த நந்தகோபால், துரைக்கண்ணு, பச்சையம்மாள், கோபிகா ஆகிய நான்கு பேரையும் ராஜாம்புலியூர் கிராமத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சாலை விபத்தில் இறந்த சம்பவம், அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
14-Mar-2025