போதை மாத்திரை வைத்திருந்த மூன்று வாலிபர்கள் கைது
செஞ்சி; விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த இளைஞர்கள் சிலர் போதை மருந்து வைத்திருப்பதாக விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அனந்தபுரம் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ஒட்டம்பட்டு கிராமத்தில் இளைஞர்கள் தங்கி இருந்த வாடகை வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் தடை செய்யப்பட்ட 8 போதை மாத்திரைகளும், போதை ஊசி போடுவதற்கான மூன்று சிரஞ்சுகளும் இருந்தன. இதையடுத்து அங்கு இருந்த சென்டியம்பாக்கத்தை யுவராஜ், 31, பனையூரை சேர்ந்த முகமது ஆஷிக், 25, முகமது வாசிம் கான், 25; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் யாரிடம் போதை மாத்திரைகளை வாங்கினர். வேறு யாருக்காவது சப்ளை செய்துள்ளனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.