உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதுமைப்பெண், தவப்புதல்வன் திட்டங்கள் மூலம்... ரூ.96 கோடி: மாவட்டத்தில் 69,331 மாணவ, மாணவியர் பயன்

புதுமைப்பெண், தவப்புதல்வன் திட்டங்கள் மூலம்... ரூ.96 கோடி: மாவட்டத்தில் 69,331 மாணவ, மாணவியர் பயன்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பு உதவித் தொகையாக 96 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டத்தில் 45 ஆயிரத்து 353 மாணவியர், தவப்புதல்வன் திட்டத்தில் 23 ஆயிரத்து 978 மாணவர்களும் பயனடைந்துள்ளனர். தமிழக அரசின் சார்பில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் புதுமைப்பெண் திட்டம் என்கிற மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம், கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் 115 கல்லுாரிகள் செயல்பட்டு வருகிறது. புதுமைப் பெண் திட்டத்தில் 102 கல்லுாரிகளைச் சேர்ந்த 2, 3 மற்றும் 4ம் ஆண்டுகளில் பயிலும் 12 ஆயிரத்து 901 மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வீதம் மொத்தம் ஒரு கோடியே 29 லட்சத்து ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தவப் புதல்வன் திட்டம் மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டமான தவப் புதல்வன் திட்டம், கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் பயின்று, அதன் பின் அரசு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில், தவப் புதல்வன் திட்டத்தில் 94 கல்லுாரிகளைச் சேர்ந்த 2, 3 மற்றும் 4ம் ஆண்டுகளில் பயிலும் 12 ஆயிரத்து 372 மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வீதம், ஒரு கோடியே 23 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த இரு திட்டங்களும் துவங்கியது முதல் இதுவரை புதுமைப்பெண் திட்டத்தில் 45 ஆயிரத்து 353 மாணவியர்களும், தவப்புதல்வன் திட்டத்தில் 23 ஆயிரத்து 978 மாணவர்கள் என 69,331 மாணவ, மாணவியர் பயனடைந்துள்ளனர். பெண் குழந்தை பாதுகாப்பு முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்படி கடந்த 2001ம் ஆண்டு முதல் திட்டம்-1 மற்றும் திட்டம்- 2 என்ற 2 திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், 2025-2026ம் ஆண்டிற்கு 2 கோடியே 17 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கீடு வரபெற்றுள்ளது. இத்திட்டத்தில் 548 குழந்தைகளுக்கு ஒரு கோடியே 43 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக மின்விசை நிதி நிறுவனத்தின் மூலம் வைப்பு தொகை ரசீதுகள் பெற்று வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்தியான பிறகு, அவர்களுக்கு முதிர்வு தொகை வழங்கப்படுகிறது. இதுவரை, இத்திட்டத்தில் 7,304 பயனாளிகளுக்கு 18 வயது முடிந்து முதிர்வு தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி