சென்னை - திருச்சி சாலையில் விழுப்புரத்தில் டிராபிக் ஜாம்
விழுப்புரம்; தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு, அரையாண்டுத் தேர்வு விடுமுறை டிச., 24ம் தேதி முதல் ஜன., 2ம் தேதி வரை விடப்பட்டுள்ளது. மேலும், டிச., 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர்ந்து 10 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.இதனால், சென்னையிலிருந்து, பொதுமக்கள், மாணவர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும் இருந்ததால், சென்னையிலிருந்து ஏராளமானோர் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.இதனால், நேற்று காலை 5.00 மணி முதல் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து திருச்சி நோக்கி ஏராளமான வாகனங்கள் சென்றன. இதனால், விழுப்புரம் பைபாஸ் சாலையில் வழக்கத்தை விட இருமடங்கு வாகனங்கள் சென்றன.விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் பைபாஸ் சாலை சந்திப்பில் மேம்பால கட்டுமான பணிகள் நடப்பதால் இருபுறமும் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.குறிப்பாக, திருச்சி மார்க்க வாகனங்கள் மற்றும் சொகுசு கார்கள் அதிகளவில் வந்து, இரண்டு மூன்று வரிசைகளாக அணிவகுத்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.