தி.மு.க., ஆட்சியில் பொதுமக்களுக்கு நேரடி பலன் ஒன்றிய சேர்மன் வாசன் பெருமிதம்
விழுப்புரம் : தி.மு.க., ஆட்சியில் கட்சிக்காரர்கள் பயன் பெறவில்லை. பொதுமக்கள் நேரடியாக பயனடைகின்றனர் என ஒன்றிய சேர்மன் வாசன் தெரிவித்தார். கண்டமங்கலம் அடுத்த கோண்டூர் கிராமத்தில் தி.மு.க., கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் குமரன், இளைஞரணி அமைப்பாளர் பிரவீன், கவுன்சிலர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் ஊராட்சி தலைவர் ஏழுமலை வரவேற்றார். கூட்டத்தில் வரும் 17ம் தேதி தி.மு.க., முப்பெரு விழா, உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து ஆலோசனை நடந்தது. கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன் பேசுகையில், 'கடந்த கால அ.தி.மு.க., ஆட்சியில், தங்களது கட்சியினருக்கு மட்டும் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தினர். தி.மு.க., ஆட்சியில் கட்சிக்காரர்கள் பலன் பெறவில்லை. பொதுமக்கள் நேரடியாக பயனடைகின்றனர். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், நேர்மையான முறையில் பயனாளிகள் தேர்வு நடக்கிறது. தி.மு.க., தலைவரை பொறுத்தவரை, மக்கள் நலன்தான் முக்கியம் என்கிற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார்' என்றார்.