உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாய்க்கடி பிரச்னை பூதாகரமானதால் சலசலப்பு...: நகரமன்ற கூட்டத்தில் அதிகாரிகள் திணறல்

நாய்க்கடி பிரச்னை பூதாகரமானதால் சலசலப்பு...: நகரமன்ற கூட்டத்தில் அதிகாரிகள் திணறல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் நகர்மன்ற அவசர கூட்டத்தில், நாய் கடித்து பொதுமக்கள் பாதிக்கும் சம்பவத்தை கவுன்சிலர்கள் பூதாகரமாக முன்வைத்து கேள்விகளை எழுப்பியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்டு மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இங்கு, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் குடும்பங்களோடு வசிக்கின்றனர். இந்த நகர்மன்றத்தின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர்மன்ற சேர்மன் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். துணை தலைவர் சித்திக் அலி வரவேற்றார். நகராட்சி ஆணையர் வசந்தி, நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா உட்பட பொறியாளர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற கவுன்சிலர்கள் சாந்தா ராஜ், ஜெயந்தி, ரியாஸ் அகமது, கோல்டு சேகர், மணவாளன், சுரேஷ்ராம், பத்மநாபன், ஜனனி, கன்னிகா ஆகியோர் பேசியதாவது: எங்கள் வார்டுகளில் பாதாள சாக்கடை, குடிநீர், சாலை பிரச்னைகளை தீர்க்க நகராட்சி நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. நீங்கள் போடும் சாலைகள், கட்டடங்களின் தரத்தை ஆய்வு செய்வது கூட இல்லை. மக்களுக்கு எங்களால் பதில் கூற முடியவில்லை. கோலியனுாரான் வாய்க்கால் துார்வாரும் பணி மிகவும் தொய்வாக நடப்பதால், மழைக்காலத்திற்குள் சரிசெய்யப்படுமா என தெரியவில்லை. நாய்களின் தொல்லை தற்போது மக்களுக்கு பெரிய பிரச்னையாக உள்ளது. நாய்களின் இன பெருக்கம் அதிகரித்துள்ளதாலும், வெறி பிடிப்பதாலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். காமராஜர் வீதியின் இறுதியில், நகராட்சி மூலம் புதிதாக கட்டிய வணிக வளாக கடைகள் அனைத்தும் வாடகைக்கு விடாமல் பூட்டியே உள்ளதால் இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர். தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள் தரப்பில், மக்களின் அடிப்படை பிரச்னைகள் அனைத்தும் சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. இந்த பணி முடிந்தவுடன் நாய்களுக்கு கருத்தடை செய்யப்படும். முற்றிலுமாக நாய்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று விட தங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்தனர். இதை கேட்ட கவுன்சிலர்கள், கூச்சலிட்டு சலசலப்பை ஏற்படுத்தினர். அவர்களுக்கு பதில் கூற முடியாமல் அதிகாரிகள் திணறினர். தொடர்ந்து, கவுன்சிலர் ராதிகா, அ.தி.மு.க., ஆட்சியில் விழுப்புரத்தில் காட்பாடி ரயில்வே கேட்டிற்கு மேல் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல மேம்பாலம் கட்டப்பட்டது. அதேபோல், மாம்பழப்பட்டு சாலை, பானாம்பட்டில் உள்ள ரயில்வே கேட்கள் உள்ள இடங்களில் மேம்பாலம் கட்ட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார். கவுன்சிலர் மணவாளன், நகராட்சி ஊழியர்களுக்கு செலுத்தும் பி.எப்., பணத்தை இங்கு பணிபுரிந்த தற்காலிக ஊழியர் ஒருவர், கையாடல் செய்தார். அவரிடம் இருந்து தற்போது வரை எவ்வளவு பணத்தை மீட்டுள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு நகராட்சி அதிகாரிகள், போலீசார் விசாரணை நடப்பதாகவும், கூடிய விரைவில் ஊழியர்களின் பணம் மீட்கப்படும் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து, கவுன்சிலர்களின் காரசாரமான விவாதத்திற்கு பின், நகர்மன்ற தலைவர் தமிழ்செல்வி, உங்களின் கோரிக்கைகள் அனைத்து கூடிய விரைவாக சரிசெய்யப்பட்டு, மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என கூறினார். இதில், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்டு இந்தாண்டு புதிய 5 அங்கன்வாடி கட்டடங்கள் மொத்தம் ரூ. 84 லட்சத்தில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்குதல், அனைத்து வார்டுகளில் உள்ள குடிநீர் பிரதான குழாய்கள், பகிர்மான குழாய்களில் ஏற்படும் பழுதுகள், உடைப்புகளை சரிசெய்யும் பணிக்கு ரூ.9.50 லட்சம் ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்குதல் உட்பட 106 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

6 கவுன்சிலர்கள் 'மிஸ்ஸிங்'

மொத்தம் 42 வார்டுகளில் உள்ள குறைகளை கூறுவதற்காக நடந்த கூட்டத்தில், சேர்மன் உட்பட 36 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இதில், கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், நவநீதம், அமிர்தராஜ், பழனிவேலு, காவ்யா, புருஷோத்தமன் ஆகியோர் பங்கேற்கவில்லை. நகர்மன்ற கூட்டமே, எப்போவாது ஒரு முறை நடக்கும் சூழலில் கூட்டத்திற்கு வராமல் மிஸ்சாகிய கவுன்சிலர்களின் பகுதிகளின் பிரச்னைகள் சபையில் தீர்வுக்கு வராமலே போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ