தென்பெண்ணை, மலட்டாறு கரைகளை பலப்படுத்த வலியுறுத்தல்
விழுப்புரம்: இந்தாண்டு கனமழை வெள்ளத்தால் பாதிக்காதவாறு தென்பெண்ணை, மலட்டாற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்திய குடியரசு கட்சியின் மண்டல செயலாளர் குமார் தலைமையில் அக்கட்சியினர் அளித்த மனு: விழுப்புரம் மாவட்டத்தில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் வீசிய பெஞ்சல் புயல் காரணமாக, வரலாறு காணாத அளவில் கனமழை பெய்தது. அதில், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் இருபுறமும் இருந்த கரைகள் அடித்துச்செல்லப்பட்டன. இதனால், திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவில் உள்ள சித்தலிங்கமடம், சிறுமதுரை, எடையார், மழவராயனுார், திருவெண்ணெய்நல்லுார், ஏமப்பூர், காந்திகுப்பம், ஆலங்குப்பம், அரசூர், இருவேல்பட்டு உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை வெள்ளநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இதனால், இனிவரும் காலங்களில், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சித்தலிங்கமடத்தில் இருந்து ஆனத்துார் வரை ஆற்றின் இரு கரைகளையும் பலப்படுத்த வேண்டும். இருபுறங்களிலும் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.