பம்பை நதி நாகரீகம் கீழடிக்கு ஒப்பானது விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., பெருமிதம்
விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த பம்பை நதி நாகரீகம், கீழடிக்கு ஒப்பானது. அது பற்றி ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அன்னியூர் சிவா எம்.எல்.ஏ.,தெரிவித்தார்.விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 18ம் ஆண்டு மருதம் விழா நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. தொடர்ந்து பண்பாட்டு அசைவுகள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி பேசுகையில், 'வள்ளுவன் சிலை அமைத்து கால் நுாற்றாண்டு விழா கொண்டாடிய இத்தருணத்தில் திருக்குறள் புத்தகத்தை குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றார்.தொடர்ந்து விழுப்புரம் அரசு கல்லுாரி பேராசிரியர் ரமேஷ் பேசுகையில், கீழடி நாகரீகம் போன்று, பம்பை நாகரீகம் கொட்டப்பாக்கத்து வேலி, தென்னமாதேவி, அகரம் ஆகிய கிராமங்களில் தென்பெண்ணையாற்றின் கிளை நதியான பம்பை வாய்க்காலில் வெள்ளப்பெருக்கத்திற்கு பிறகு ஆற்றங்கரையில் காதணி, சுடுமண் கலையங்கள் பல சுவடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. கீழடியை போன்று ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இறுதியாக விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா பேசுகையில், விக்கிரவாண்டி அடுத்த பம்பை நதி நாகரீகம் குறித்து அமைச்சர் பொன்முடி மற்றும் தொல்லியல் துறை ஆணையரான முதன்மை செயலாளர் உதயசந்திரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தொகுதி எம்.எல்.ஏ., என்ற அடிப்படையில் பெருமிதம் கொள்கிறேன். தமிழர்களின் நாகரீகத்தை வெளியுலகிற்கு கொண்டுவரும் முயற்சிக்கு முதல்வர் முன்னுரிமை அளித்து வருகிறார். மேலும், தொல்லியலில் ஆர்வமுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கவனத்திற்கும் கொண்டு சென்று, ஆய்வு நடத்திட முயற்சிகள் மேற்கொள்வேன் என்றார்.